அமீரகத்தின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை
அமீரகத்தில் மார்ச் 26 பரவலாக மழை பெய்த நிலையில், ராஸ் அல் கைமாவில் உள்ள ஷௌக்கா பகுதியில் அதிகபட்சமாக 77.5 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்தது.
அஜ்மானில் மார்ச் 25 அன்று மதியம் 1:40 மணி அளவில் ஜுர்ஃப் பகுதியில் மிகக் கடுமையான காற்றுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி ஏற்பட்டது.
ஷார்ஜா மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளில் மார்ச் 25 அன்று ஆலங்கட்டி மழை பொழிந்தது. இதனால் காணும் இடமெல்லாம் பனிக்கட்டிகளாக காட்சியளித்தன.
மார்ச் 24 அதிகபட்சமாக தாஸ் தீவில் 47.9 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபு விண்வெளி அறிவியல் சங்கத்தின் (Arab Union for Astronomy and Space Sciences) உறுப்பினரான இப்ராகிம் அல் ஜர்வான், மார்ச் நடுப்பகுதி முதல் மே தொடக்கம் வரையிலான காலத்தை அரபு மொழியில் ‘சரயத்’ அல்லது ‘மராவிக்’ என்று அழைக்கிறார்கள். இது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்திற்கு மாறும் ஒரு இடைக்கால பருவம் ஆகும்.
இந்த காலத்தில் வளிமண்டலத்தில் திடீர் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற தன்மை ஏற்படும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும், சில நேரங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் 74 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்று, ஒரு சாதாரண குறைந்த அழுத்த மண்டலமே தவிர, புயல் அல்ல என வானிலை நிபுணர் டாக்டர் அகமது ஹபீப் கூறியுள்ளார்.
அமீரகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டிலிருந்தே தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள மசூதிகள், வழிபாட்டாளர்களை வீடுகளில் தொழுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே ஒலிபெருக்கிகள் மூலம் இந்த வழிகாட்டுதலை அறிவிக்குமாறு இமாம்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம் தெரிவித்திருந்தது.
குடியிருப்பாளர் குடும்பங்களுக்கு இலவசம்!
அமீரக குடியிருப்பாளர் குடும்பங்களுக்கு இலவச நுழைவு அனுமதியை அறிவித்துள்ளது மிராக்கிள் கார்டன். இந்தச் சலுகை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே இலவசமாக நுழைய முடியும்.
இலவச நுழைவுக்கு எமிரேட்ஸ் ஐடியைக் காட்ட வேண்டும். இலவசமாகச் செல்பவர்கள் Gate 3 வழியாகச் செல்ல வேண்டும். தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே இலவசமாக நுழைய முடியும். 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த சீசன் முடியும் மே 31 வரை அனுமதி இலவசம்.
முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக குடியிருப்பாளர்களுக்கான இலவச நுழைவு ரத்து செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் அல்லாமல் தனியாக செல்லும் குடியிருப்பாளர்கள் Gate 1 அல்லது 2 வழியாகச் செல்ல வேண்டும். ஒரு நபருக்கு AED 52.50 வசூலிக்கப்படும்.
சிகிச்சைக்கு உதவிய காவல்துறை
மார்ச் 23 அன்று, எகிப்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் மகனின் கீமோதெரபி சிகிச்சைக்காக துபாயிலிருந்து ஷார்ஜாவுக்கு பயணித்தபோது பெய்த கனமழையால் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேரம் கடந்ததால் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது தந்தை காவல் ரோந்து படையினரின் உதவியை நாடினார்.
இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து, குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து போக்குவரத்தை சீரமைத்து, சிறுவனை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
2024ஆம் ஆண்டை விட இம்முறை மழை குறைவு
அமீரகத்தில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு 93.3 மி.மீ மட்டுமே. இது 2024 ஏப்ரல் 16 அன்று அல் ஐனின் கத்ம் அல் ஷக்லாவில் ஒரே நாளில் பதிவான 254 மி.மீ மழையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இது 1949-க்கு பிறகு அமீரகத்தில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும்.
அல் ஐனின் கத்ம் அல் ஷக்லாவில் 2024 ஏப்ரல் 16 அன்று பதிவான 254 மி.மீ மழையுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் பதிவான 93.3 மி.மீ மழை அளவு குறைவு.
ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர்
அமீரகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ரீம் பின்ட் இப்ராஹிம் அல் ஹாஷிமி, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஈரானை வழிநடத்தும் தலைவர்கள் ஒன்றைப் பேசுகிறார்கள், ஆனால் முற்றிலும் மாறான ஒன்றை செய்கிறார்கள். எந்த நாட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது.
கோவிட் தொற்றும் நிலநடுக்கங்களும் ஏற்பட்ட காலத்தில், ஈரானுக்கு அமீரகம்
மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை வழங்கியது. தங்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத அண்டை நாடுகளின் மீது ஈரான் மிகுந்த வன்மத்தை கொண்டிருக்கிறது.
அமீரகம் – ஈரான் இடையேயான உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது.இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும், அமீரகம் பாதுகாப்பான நாடு என்ற தனது நற்பெயரை உலக அரங்கில் மீண்டும் நிலைநாட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
