பள்ளிகளில் மதிய தொழுகை முதல் நிறைவடைந்த கோடைக்காலம் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்!

ஒரே மெசேஜ் உடனடி நடவடிக்கை!

அல் கராமாவின் ஒரு சாலையில் குழி இருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) புகார் தெரிவித்ததை அடுத்து, இரண்டு நாட்களுக்குள் இருந்த தடம் தெரியாமல் குழி சீரமைக்கப்பட்டது.

சாலையில் குழி இருப்பதற்கு முன்பும், அது சீரமைக்கப்பட்டதற்கு பின்பும் உள்ள மாற்றம் எப்படி இருக்கிறது என்பதை குடியிருப்பாளர்கள் காணொளியாக பகிர்ந்து, இதனால் தான் துபாய் உலகின் சிறந்த நகரம் என பதிவிட்டுள்ளனர்.

பள்ளிகளில் மதிய தொழுகை செய்ய அரசு அறிவிப்பு !

அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய தொழுகை செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என அமீரக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மாணவர்களிடையே நன்மதிப்புகளை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமீரக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ  X தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பள்ளிகள் என்பது அறிவைப் பெறும் இடம் மட்டுமல்ல, மதிப்புகளையும் கற்றுக்கொள்கிற இடமாகும்” என கல்வி தெரிவித்துள்ளது.

இந்த பதிவுடன் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,  மாணவர்கள் தொழுகைக்கான அழைப்பை கூறுவது, தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஒன்றாக தொழுவது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அமீரகத்தில் நிறைவடைந்த கோடைக்காலம்!

அமீரகத்தில் நிலவி வந்த கோடைக்காலம் செப்.23 அன்றுடன் முடிவடைந்தது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்கள் கிட்டத்தட்ட 12 மணிநேரம் சமநிலையை அடையும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோடைக்காலம் முடிந்து இலையுதிர்காலம் தொடங்கியதால் அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும். மேலும் இந்தக் காலத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மழை மேகங்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதனால் இடி மற்றும் மழையைப் பார்க்கலாம்.

செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இரவு நேரம் நீளமடைவதால், அமீரகத்தின் பிரபலமான குளிர்கால இதமான வானிலைக்கு இது வழி அமைக்கும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க அதிபர் டிரம்பின் H-1B விசா மீதான கட்டண உயர்வு எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அந்த வகையில் திர்ஹாமிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபட்ச அளவான ரூ.24.1 நிலையைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு குறையும். இதனால் இந்தியாவிற்கு வரும் அமெரிக்க டாலர் வரத்து பாதிக்கப்படும்.

H-1B விசா கட்டணத்தை உயர்த்தியதே இதற்கு காரணம் ஆகும். இதனால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களின் வாய்ப்பு குறையலாம். அதுமட்டுமின்றி இந்திய ஐடி துறையில் லாபத்தில் பாதிப்பு ஏற்படலாம். 

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தால் இந்தியா உடனான பணப்பரிமாற்றம் குறையும். இதனால் இந்தியாவிற்கு வரும் டாலரின் வருவாயும் பாதிக்கப்படும். இந்த விசா கட்டண உயர்வு இதுவரை இருந்த வெளிநாட்டு சிக்கல்களை மேலும் பெரிதாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது, ஆசிய நாடுகளுக்கு இடையேயான போட்டி ஆகியவை விநியோகத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயை உலகின் சிறந்த நகரமாக மாற்ற ஆட்சியாளர் வேண்டுகோள்! 

துபாயை உலகின் சிறந்த நகரமாக மாற்ற ஒவ்வொரு அதிகாரியும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும், அதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென செப்.24 அன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் பேசினார்.

மேலும் அவர், “இருப்பிடம், உணர்வு, அந்தஸ்து, கலாச்சாரம், நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் துபாய் அழகான நகரமாக திகழ்கிறது. நமது அனைத்து முடிவுகளும், கொள்கைகளும், திட்டங்களும் மக்களிடமிருந்து தொடங்கி அவர்களுடனே முடிவடைய வேண்டும்” என கூறினார். 

TAGGED: