உலகின் பரபரப்பான ஏர்போர்ட் முதல் கோல்டன் விசா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  வரை; அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!


அஜ்மான் காவல்துறையின் நெகிழவைக்கும் செயல்!

பெண் சுற்றுலா பயணியின் கார் சாலையில் பழுதாகி நிற்க, அதை பழுது பார்க்க ஒரு நாள் முழுவதும் ஆகும் என்ற நிலையில், அஜ்மல் காவல்துறை அந்த பயணிக்கு இரவில் தங்க ஓய்வறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

 மஸ்ஃபவுட் வழியாக ஓமன் நாட்டுக்கு செல்லும் போது ஆப்பிரிக்க பெண்மணியின் கார் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த மஸ்ஃபவுட் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காரை பழுது பார்க்க அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் காரை பழுது பார்க்க ஒரு நாள் முழுவதும் ஆகும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறிய நிலையில், சுற்றுலா பயணிக்கு இரவில் தங்க இடம் கொடுத்து உதவியுள்ளது மஸ்ஃபவுட் காவல்துறை.

அதற்கு அந்த சுற்றுலாப் பயணி, மஸ்ஃபவுட் காவல்துறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அமீரகத்தின் விருந்தோம்பல் உணர்வையும், காவல்துறையின் கருணை உள்ளத்தையும் இது காட்டுவதாக அந்த பெண் தெரிவித்தார்.

Cost of Living குறைவான வளைகுடா நாடு!

2025-இல் மக்கள் வாழ்வதற்கு குறைந்த செலவே ஆகும் GCC நாடுகளில் ஓமன் முதலிடத்திலும், அமீரகம் கடைசி இடத்திலும் உள்ளது. அமீரகத்துடன் ஒப்பிடும்போது ஓமனில் செலவுகள் 26.5% குறைவாக இருக்கும். 

Numbeo உலகளவில் 2025 Cost of Living Index வெளியிட்டுள்ளது. அதில் GCC நாடுகளுக்கான 2025 Cost of Living Index தரவரிசையில் பஹ்ரைன் 2வது இடத்திலும், குவைத் 3வது, கத்தார் 4வது மற்றும் சவூதி அரேபியா 5வது இடத்தில் உள்ளது.

அமீரகத்தில் ஒரு குடும்பத்தை நடத்த மாதாந்திர செலவு AED 14,765 தேவைப்படுகிறது. அதுபோல் தனி நபருக்கு AED 4,242.5 தேவைப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் அழகான நகரம்!

டிராவல்பேக் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டில் இரவில் சுற்றிப் பார்க்க உலகின் அழகான நகரங்கள் பட்டியலில் நியூயார்க் மற்றும் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக துபாய் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

 உலகெங்கிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களின் இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகள், ஒளி மற்றும் ஒலி மாசுபாட்டின் அளவுகள், இரவு நேர பாதுகாப்பு  ஆகியவற்றை ஆய்வு செய்து 10 நகரங்களை டிராவல்பேக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் 4வது இடத்தையும், ஓமன் நாட்டின் மஸ்கட் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

கோல்டன் விசா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

AED 1,00,000 செலுத்தினால் இந்தியர்கள் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறலாம் என்றும், இதற்கு சொத்துக்களில் முதலீடு செய்யவோ அல்லது தொழில் தொடங்கவோ தேவையில்லை என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது. 

கோல்டன் விசாவைப் பெற பதிவு செய்பவர்களுக்கான செயல்முறையை Rayad குழுமம் மற்றும் VFS குளோபல் இணைந்து செயல்படுத்தும் என  வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமீரகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே கோல்டன் விசா வழங்கப்படும் என அமீரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தவறாக பரப்பப்பட்ட செய்திகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரிய Rayad குழுமம், இது ஒரு ஆலோசனை முயற்சி என்றும்,  கோல்டன் விசா தொடர்பான ஆலோசனை சேவைகளை நிறுத்துவதாக தெரிவித்தது. மற்றொரு நிறுவனமான VFS ETM, கோல்டன் விசா திட்டத்தில் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விசாரணைகளைப் பெற ராயத் குழுமம்  எங்களை அங்கீகரித்தது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகின் பரபரப்பான ஏர்போர்ட்  DXB!

 சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான  உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் துபாய்  சர்வதேச விமான நிலையம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 92.3 மில்லியன் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

2024-இல் உலகின் பரபரப்பான 20 விமான நிலையங்களின் பட்டியலில்  108.1 மில்லியன் பயணிகள் வருகை புரிந்த அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் (ATL) முதலிடத்தில் உள்ளது. 

இந்தியாவின் புது டெல்லி விமான நிலையம் (DEL) 77.8 மில்லியன் பயணிகள் வருகையுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய விமான போக்குவரத்தில் 2024ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 9.4 பில்லியனை கடந்துள்ளதாக ACI தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை முந்தியது அமீரகம்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட கவுன்சில் (CTBUH) தரவுகளின்படி, 300 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிய கட்டிடங்களின் எண்ணிக்கையில் ஐக்கிய அரபு  அமீரகம் அமெரிக்காவை முந்தியுள்ளது.

தற்போது, அமீரகத்தில் 300 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 37 கட்டிடங்கள் உள்ளன. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இந்த பட்டியலில் அமீரகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.  

அமீரகத்தில் 300 மீட்டருக்கு அதிகமான உயரத்தில்   37 கட்டிடங்கள்  உள்ளன. வானுயர கட்டிடங்கள் அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 300 மீட்டருக்கும் அதிக உயரமான 122 கட்டிடங்கள் உள்ளன.  அமெரிக்காவில் 31 கட்டிடங்கள் உள்ள நிலையில் 3வது இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. 

அமீரகத்தில் 150 மீட்டருக்கு மேல் 345 கட்டிடங்களும், 200 மீட்டருக்கு மேல் 159 கட்டிடங்களும் உள்ளன. 

TAGGED: