பள்ளியில் ஆடை கட்டுப்பாடு அவசியம்:
அமீரகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேக்கப் போடக்கூடாது, கருப்புக் காலணிகள் அணிய வேண்டும் உள்ளிட்ட 10 ஆடை கட்டுப்பாடு விதிகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- உள்ளூர் மரபுகளுக்கு ஏற்ப சிகை அலங்காரம் இருக்க வேண்டும். மேலும் ஹேர் டை பயன்படுத்தக் கூடாது.
- ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி சீருடையுடன் கருப்பு, வெள்ளை அல்லது கடற்படை நீல நிற ஷைலா அணியலாம்.
- மாணவர்கள் கந்தூராவின் கீழ் வெள்ளை ஆடைகளை சாதாரண அல்லது விளையாட்டு காலணிகளுடன் அணிய வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அட்டவணையின்படி, அனைத்து மாணவர்களும் PE வகுப்புகளின் போது விளையாட்டு சீருடையை அணிய வேண்டும்.
- பள்ளியில் நெயில் பாலிஷ் போட மற்றும் ஒப்பனை செய்ய அனுமதி இல்லை உள்ளிட்ட 10 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிச் சீருடை நாட்டின் கல்வி மதிப்புகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 2025-26 கல்வியாண்டில் கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அமீரக கல்வி அமைச்சகம் இந்தப் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
நெரிசலை குறைக்க மெட்ரோவில் புதிய வழித்தடம்
துபாய் மெட்ரோவில் காலை மற்றும் மாலை பிஸியான நேரங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க ரெட் லைனில் மூன்று புதிய வழித்தடங்களை RTA அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மூன்று புதிய வழித்தடங்கள் காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் செயல்படும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
சென்டர் பாயிண்ட் மெட்ரோ நிலையத்தில் இருந்து மூன்று மெட்ரோ நிலையங்களுக்கும் செல்லும் மெட்ரோ ரயில் மறுபடியும் அதே வழித்தடத்தில் சென்டர் பாயிண்ட் மெட்ரோ நிலையம் நோக்கி செல்லும்.
புதிய இந்திய தூதர் நியமனம்
அமீரகத்திற்கான இந்திய தூதராக 2021 முதல் பணியாற்றி வந்த சஞ்சய் சுதீர் மாற்றப்பட்டு புதிய தூதராக டாக்டர் தீபக் மிட்டல் என்பவரை நியமித்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
1998 பேட்சைச் சேர்ந்த IFS அதிகாரியான தீபக் மிட்டல் இந்தியப் பிரதமரின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றுகிறார் மற்றும் 2020 முதல் 2023 வரை கத்தார் நாட்டுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
தீபக் மிட்டல் அவர்கள் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ்போர்ட் சோதனையை எளிதாக்கிய DXB!
துபாய் விமான நிலையத்தில் AI மற்றும் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 பயணிகளின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் “ரெட் கார்பெட்” நடைபாதை பயன்பாட்டுக்கு வந்தது.
துபாயின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்துடன் இணைந்து துபாய் விமான நிலையம் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயணிகள் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாதாரண முறைகளில் ஒரு பயணி மட்டுமே பரிசோதனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய ரெட் கார்பெட் நடைபாதையானது ஒரே நேரத்தில் 10 பயணிகளை 6 முதல் 14 விநாடிகளில் பரிசோதனை செய்யும் திறன் கொண்டது.
இனி ஒவ்வொரு ஆண்டும் துபாய் மாலத்தான்
துபாய் மால்களில் முதல் முறையாக நடைபெற்ற மாலத்தான் நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 முதல் செப்.15 வரை இந்நிகழ்வு நடைபெறும் என துபாய் இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.
கோடை காலத்தில் குடியிருப்பாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த நிகழ்வுக்காக மூன்று மாத காலம் துபாயின் 9 ஷாப்பிங் மால்கள், உட்புற நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் பாதைகளாக மாற்றியமைக்கப்பட்டன.
நடப்பாண்டு நடைபெற்ற துபாய் மாலத்தான் நிகழ்வில் இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மாத காலம் நடந்த இந்த மாலத்தான் நிகழ்வில் 40,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மொத்தம் 120 மில்லியன் அடிகள் பதிவு செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரக மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில், துபாய் விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. நிறைவு நாளில் 40 ஓட்டப் பந்தய வீரர்களைக் கொண்ட 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
