ஓட்டுநரில்லா டெலிவரி வாகனம் முதல்  iPhone 17 விற்பனை வரை; அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்!

அபுதாபியில் BAPS கோயிலில் தரிசனம் செய்த சசிகுமார்!

அபுதாபியில் உள்ள BAPS கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சசிகுமார், அமீரகத்தின் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இக்கோயில் திகழ்கிறது என புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த செப்.13 அன்று BAPS கோயிலுக்கு வருகை புரிந்த நடிகர் சசிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டி, உலகில் உள்ள அனைவரும் எவ்வித பேதமும் இல்லாமல் வருகை தரும் கோயிலாக இது உள்ளது என சசிகுமார் கூறினார்.

அபுதாபியில் உள்ள முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் கோயிலை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இங்கு BAPS என்பதற்கு போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சாஸ்தா என்பது பொருள்.

இந்த கோயிலை கட்டுவது குறித்த அறிவிப்பை துபாய் அரசு கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு, 27 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வழங்கியது.இந்த கோயிலில் உள்ள 7 கோபுரங்கள் அமீரகத்தின் 7 எமிரேட்டுகளை குறிப்பிடுகிறது. அதேபோல அங்குள்ள சிற்பங்களில் அரபு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

 ஓட்டுநரில்லா டெலிவரி வாகனம்!

அபுதாபியின் முதல் தானியங்கி டெலிவரி வாகனத்தை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் சிறப்பாக அமீரகத்தில் முதல் முறையாக இந்த தானியங்கி டெலிவரி வாகனத்திற்கு நம்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. 

தொழில்நுட்ப நிறுவனமான K2 மற்றும் பார்சல் டெலிவரி நிறுவனமான EMX உடன் இணைந்து அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை இந்த தானியங்கி டெலிவரி வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், மனித உதவி இல்லாமல் பொருட்களை டெலிவரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தின் முதல் சோதனை ஓட்டம் மஸ்தார் நகரில் நடைபெற்று வருகிறது. விரைவில் அபுதாபி முழுவதும் அதன் சேவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஏலத்தில் AED 188.7 மில்லியனுக்கு விற்பனையான மால்

துபாயின் புகழ்பெற்ற வணிக வளாகமாக இருந்த லாம்சி பிளாசா AED 188.7 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு லாம்சி பிளாசா மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

1997ஆம் ஆண்டு திறக்கப்பட லாம்சி பிளாசா துபாயின் முக்கிய வணிக வளாகமாக இருந்து வந்தது. அதன் பின் 2017ஆம் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு லாம்சி பிளாசா முழுவதும் மூடப்பட்டது. கடந்த ஆண்டு ஏலத்தில் AED 200 மில்லியன் என ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் லாம்சி பிளாசாவை யாரும் வாங்க முன்வரவில்லை. அதன் பின்னர், கடந்த மாதம் AED 185 மில்லியன் ஆரம்ப விலைக்கு ஏலத்தில் வந்த இந்த வணிக வளாகத்தை AED 188.7 மில்லியனுக்கு ஒருவர் வாங்கியுள்ளார்.

குறைந்த கட்டணத்தில் புர்ஜ் கலீஃபாவை பார்வையிடலாம்!

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தையொட்டி செப்.19 முதல் செப்.28 வரை புர்ஜ் கலீஃபாவின் 124 & 125ஆம் தளத்தை  வெறும் AED 95-க்கு அமீரக குடியிருப்பாளர்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான டிக்கெட் கட்டணம் AED 179 இருக்கும் நிலையில் சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தையொட்டி செப்.19 முதல் செப்.28 வரை AED 95-ஆக டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட தேதியில் காலை 7:00  முதல் மாலை 3:30  வரையிலும், மாலை 7:30  முதல் இரவு 11:00  வரையிலும் அனுமதி வழங்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய: https://ticket.atthetop.ae/tickets/book-tickets/

முன்பதிவு செய்தால் மட்டுமே முதல்நாளில் ஐபோன் வாங்க முடியும்: 

துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் செப்டம்பர் 19 முதல்  iPhone 17 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், முதல் நாளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிகப்படியான கூட்டம் கூடுவது  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் கடந்த செப்.9 அன்று அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் முன்பதிவு செப்.12 அன்று தொடங்கியது. இந்நிலையில் அதன் நேரடி விற்பனை  செப்டம்பர் 19  முதல் ஆரம்பமானது. 

கடந்த ஆண்டு துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் iPhone 16 சீரிஸ் போன்களின் விற்பனையின் போது அதிகப்படியான கூட்டம் கூடியது. இதனால் இந்தாண்டு அதனை தவிர்க்கும் பொருட்டு, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் நாளில் iPhone 17 சீரிஸ் போன்கள் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அமீரகத்தில் iPhone 17 சீரிஸின் விலைகள்: 

iPhone 17:   AED 3,399 முதல் ஆரம்பமாகிறது. 

iPhone 17 Air: AED 4,299 முதல் 

iPhone 17 Pro: AED 4,699 முதல் 

iPhone 17 Pro Max: AED 5,099 முதல் 

TAGGED: