ஓட்டுநரில்லா டாக்ஸி சேவைகளை தொடங்கிய அபுதாபி;  பயன்படுத்துவது எப்படி?

அபுதாபியில் Uber நிறுவனமும், சீனாவைச் சேர்ந்த WeRide  என்ற நிறுவனமும் இணைந்து ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 

முக்கிய அம்சங்கள்:

எங்கு?

அபுதாபியில் உள்ள யாஸ் தீவு (Yas Island), சாதியட் தீவு (Saadiyat Island), அல் மரியா தீவு (Al Maryah Island), அல் ரீம் தீவு (Al Reem Island) போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ரோபோடாக்சி சேவை கிடைக்கிறது.

எப்போது?

தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த டாக்ஸிகள் இயங்குகின்றன

பயன்படுத்துவது எப்படி?

பயணிகள் ஊபர் செயலி (Uber App) மூலமாகப் பதிவு செய்து, “Autonomous” என்ற புதிய விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Uber Comfort அல்லது Uber X டாக்ஸிகளை போலவே இதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஊபர் தளத்தில் அமெரிக்காவிற்குப் பின் முழுமையாக ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சி சேவைகளை வழங்கும் முதல் நகரமாக மாறியுள்ளது அபுதாபி. 

அதிநவீன தொழில்நுட்பமும் பாதுகாப்பும்

வீரைட் நிறுவனத்தின் வாகனங்கள் உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, லைடார் (Lidar – Light Detection and Ranging) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

லேசர் ஒளி மூலம் தூரத்தை அளந்து, சுற்றியுள்ள பகுதியின் துல்லியமான 3D வரைபடங்களை உருவாக்க இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. மேலும், ரேடார்கள் மற்றும் மேம்பட்ட கேமராக்கள் மூலம் வாகனத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 

வீரைட் நிறுவனம் ஏற்கனவே அபுதாபி போக்குவரத்து அமைப்பான (Abu Dhabi Mobility) மற்றும் உள்ளூர் டாக்ஸி சேவை நிறுவனமான தவாசுல் (Tawasul) ஆகியவற்றுடன் வலுவான கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் கூட்டமைப்பின் துணையுடன், வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஆயிரக்கணக்கான ரோபோடாக்சிகளாகத் தங்கள் சேவையை விரிவாக்க இந்த நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.