2024-இல் வேலையின்மை காப்பீடு திட்டத்தில் பயனடைந்த 10,500-க்கும் அதிகமான தொழிலாளர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 10,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 2024 ஆம் ஆண்டில் வேலையின்மை காப்பீட்டு திட்டத்தால் பயனடைந்துள்ளதாக மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் பணியில் இல்லாத காலத்தில் இந்த திட்டம் அவர்களுக்கு தேவையான நேரத்தில் நிதி உதவியை வழங்கி சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வேலையின்மை காப்பீட்டு திட்டம்:

யாருகெல்லாம் பயன்பெறும்

அமீரகத்தில் வேலையை இழந்து அடுத்த வேலையை தேடும் ஊழியர்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போது இதில், சுமார் 9 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர்.

எப்படி உதவும்?

பணியை இழப்பவர்களுக்கு இந்த திட்டம் மூலம் அவர்கள் பெற்ற ஊதியத்தில் இருந்து 60% வழங்கப்படுகிறது, மேலும் இந்த நிதி மூன்று மாதங்கள் வரை நீடிக்கும்.

வேலையின்மை காப்பீடு யாருக்கு?

இந்த இழப்பீட்டை பெற தொழிலாளர்கள் குறைந்தபட்ச சந்தா காலம் 12 மாதங்கள் மற்றும் முறையான வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இது தனி நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சந்தையில் ஒரு தனிநபரின் வேலையின் போது மொத்த இழப்பீடு 12 மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

திட்டத்தின் முதல் பிரிவு

  • அடிப்படைச் சம்பளம் AED 16,000 அல்லது அதற்கும் குறைவாகப் பெறும் ஊழியர்களுக்கு.
  • மாதச் சந்தாக் கட்டணமான AED 5.
  • இதில் அதிகபட்சமாக மாதத்திற்கு AED 10,000 வழங்கப்படும்.

திட்டத்தின் இரண்டாம் பிரிவு

  • AED 16,000-க்கு மேல் அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு.
  • மாதாந்திர சந்தாக் கட்டணம் AED 10.
  • இதில் அதிகபட்சமாக மாதத்திற்கு AED 20,000 வழங்கப்படும்.

யார் பயன்பெற முடியாது:

முதலீட்டாளர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் இதில் பயன்பெற முடியாது.

இந்தத் திட்டம் வேலை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வலுவான பணியாளர்களை உருவாக்கவும், கடினமான காலங்களில் தொழிலாளர்களுக்கு உதவுவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

TAGGED: