துபாயில் நடைபெற்ற உலக களரி மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப்

ஜனவரி 26, 2025: உலக களரி கூட்டமைப்பு (WFK) மற்றும் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பு (TEPA) இணைந்து நடத்திய உலக களரி மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024-25, துபாய் அல் ரஷீதியா பகுதியில் உள்ள Bright Learners பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

TEPA-வின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தொடங்கி வைத்த இந்நிகழ்வில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.

சிறப்பு விருந்தினர்கள்:

இந்நிகழ்வில் தொழிலதிபர் & சமூக சேவகர் டாக்டர் மணல் எல்லடி, சம்யுக்தா பவன் உணவகத்தின் உரிமையாளர் டாக்டர் ராமமூர்த்தி சுப்ரமணியன், பெருமாள் பூக்கடையின் உரிமையாளர் டாக்டர் சுடலைமுத்து பெருமாள், டாக்டர் மீனா (Romana Group of Companies), மலபார் கோல்ட் நிறுவன தலைவர் சாக்கோ ஊலாகாடன், Waffa குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முன்னீர் அல் வாஃபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலக களரி கூட்டமைப்பின் நிறுவனர், ரமேஷ் ரத்னகுமார் இந்த நிகழ்வில் பேசுகையில், “உலக களரி கூட்டமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், 23 நாடுகளிலிருந்து 4000 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கராத்தே, டேக்-ஒன்-டோ போன்ற தற்காப்பு கலைகளுக்குத் தரப்படும் உலக அங்கீகாரத்தை போன்று, தமிழர் கலைகளான சிலம்பம் (Silambam), களரி (kalari), வேல் கம்பு (Vel Kambu), குத்துவரிசை (Kuthu Varisai) ஆகியவற்றிற்கும் பெற்று தரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம், இதற்காகவே  இந்த சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் இந்த போட்டிகள் இணையதளத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக நேரில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிகழ்வை துபாயில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த TEPA மற்றும் அதன் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

உலக களரி கூட்டமைப்பின் இணை நிறுவனர், பரத் ராமமூர்த்தி கூறுகையில், “உலக களரி கூட்டமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து 43 ஆசான்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சிலம்பம், களரி, வேல் கம்பு, குத்துவரிசை போன்ற கலைகளுக்குப் பத்து நிலைகளைக் கொண்ட ஒரு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

பரிசு வழங்கும் விழா:

மாலையில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில், மாண்புமிகு ஷேக் அலி பின் அப்துல்லா அல் முவல்லா மற்றும் Er. அல்லியா ஷேக் அல் கிண்டில் (உடன்பாடு மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர்) ஆகியோர் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.

For More Details,

Contact: Vineeth Aasan
Instagram: @kalaridubai_wfka