தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகாவில் வி. களத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த அமீரக வாழ் தமிழர்கள் நடத்திய “வி. களத்தூர் சங்கமம் 2025” எனும் நிகழ்வு 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் முஸ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது.
அன்று காலை 09 மணிக்கு துவங்கி மாலை 06 வரை மிகவும் கலகலப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைகள் பெரியோர் உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்வில் இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் துணை தலைவருமான திரு. எஸ்.எம்.ஹிதாயத்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், கிரிக்கெட், பேட்மிட்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
வருடா வருடம் வி. களத்தூர் மக்கள் அனைவரும் சங்கமிக்கும் இந்த நிகழ்வு தங்களது ஊருக்கே சென்று வரக்கூடிய அனுபவத்தை தங்களுக்கு தருவதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
“வி. களத்தூர் சங்கமம்” நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒவ்வொரு வருடமும் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாகிகள் மற்றும் ஸ்பான்சர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
