KRG குழுமம் வழங்கிய Tourist Family படத்தின் ஸ்கிரீனிங் நிகழ்வும், வெற்றி விழா நிகழ்வும் மே 17 மற்றும் மே 18 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவில் வெகு விமர்சியாக நடைபெற்றது. DBQ நிறுவனம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வுகளில் படத்தின் நடிகர்கள் சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜிவிந்த் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த Tourist Family கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பி செல்லும் ஒரு குடும்பம் சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுவதால் ஏற்படும் பிரச்சனைகளையும், அதனை அந்த குடும்பம் கையாளும் விதத்தையும் நகைச்சுவையாக பேசுகிறது இப்படம்.
உணர்வுபூர்வமாக இந்த கருத்தை பேசியிருப்பதால் சமூக வலைதளங்களில் Tourist Family திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மே 17 அன்று மாலை 05:30 மணிக்கு ஷார்ஜா அல் ஷாப் திரையரங்கில் பொது மக்களுடன் இணைந்து படக்குழுவினர் படத்தை கண்டுகளிக்கும் நிகழ்வும், மே 18 அன்று மாலை 05:30 மணிக்கு ஷார்ஜா சென்ட்ரல் மாலில் உள்ள RK கூட்ட அரங்கில் படத்தின் வெற்றி விழா நிகழ்வும் அரங்கேறியது.
துபாயில் Tourist Family படக்குழுவிற்கு வரவேற்பு
இந்த நிகழ்வுகளில் பங்கேற்க துபாய் வந்த நடிகர் சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் படக்குழுவினரை KRG குழுமத்தின் தலைவர் திரு. கண்ணன் ரவி அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் வலைப்பேச்சு பிஸ்மி, ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீத் யாசின் மற்றும் DBQ நிறுவனத்தின் தலைவர் கலைவாணி ஆகியோர் உடன் வரவேற்றனர்.
Tourist Family ஸ்கிரீனிங் நிகழ்வு
மே 17, 2025 அன்று மாலை 5:30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள அல் ஷாப் திரையரங்கில் நடைபெற்ற இந்த இலவச நிகழ்வில் பெருவாரியான ரசிகர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர்கள் சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் படக்குழுவினர் படத்தை கண்டு ரசித்தனர். பின்னர் ரசிகர்களுடன் உரையாடிய சசிகுமார் “கடல் கடந்து உங்களை பார்க்க வந்ததில் மகிழ்ச்சி’ என தெரிவித்தார், அதை தொடர்ந்து அவர்கள் கேட்ட கலகலப்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
Tourist Family படத்தின் வெற்றி விழா
மே 18, 2025 அன்று மாலை 5:30 மணிக்கு ஷார்ஜா சென்ட்ரல் மாலில் உள்ள RK கூட்ட அரங்கில் Tourist Family படத்தின் வெற்றி விழா நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு விமர்சையாக நடைபெற்றது. கலகலப்பாக நடந்த வெற்றி விழாவை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படம் குறித்த கேள்விகளுக்கு நடிகர்கள் சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் படக்குழுவினர் ஒவ்வொருவராக பதிலளித்தனர். இறுதியாக வெற்றி விழாவுக்கு வந்த ரசிகர்களுடன் சசிகுமார், மிதுன் ஜெய்சங்கர் பட குழுவினருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
