தனியார் துறை ஊழியர்களின் கல்விப் பட்டங்களைச் சரிபார்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் சேவை அமீரகத்திற்கு வெளியே வழங்கப்பட்ட கல்விப் பட்டங்களைக் கொண்ட தொழிலாளர்களுக்குப் பொருந்தும் 1 முதல் 4 வரையிலான திறன் நிலைகளை உள்ளடக்கியது. இந்த சேவையை, அமீரக மனிதவள அமைச்சகம் (MoHRE) துவக்கியுள்ளது.
கல்வித் தகுதி சரிபார்ப்புத் திட்டம்:
இச்சேவையை MoHRE-இன் அதிகாரப்பூர்வ இணையதளம், ஸ்மார்ட் செயலி மற்றும் நாடு முழுவதிலும் உள்ள வணிக சேவை மையங்கள் வாயிலாகப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், அமீரகத்திற்குள் பெற்ற டிகிரிகளும் இந்த சேவையில் சேர்க்கப்படும். ’கல்வித் தகுதி சரிபார்ப்புத் திட்டம்’ அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
நேரடி டிஜிட்டல் சரிபார்ப்பு மூலம் வேலைவாய்ப்பு செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் கல்வித் தகுதிகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. இது மிகவும் நம்பகமான பணியமர்த்தல் நடைமுறைகளை அனுமதிக்கிறது. தேவையான ஆவணங்களைக் குறைக்கிறது மற்றும் சேவையை ஒருமுறை கட்டணத்துடன் ஒருங்கிணைந்த சரிபார்ப்பு செயல்முறையாக மாற்றுகிறது.
ஊழியர்களுக்கான தகுதி:
MoHRE வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் நாட்டில் பணிபுரிய தகுதியுடையவர்களாக இருக்க தங்கள் கல்விச் சான்றிதழ்களுக்கு அட்டெஸ்ட் பெற வேண்டியது கட்டாயமாகும். வெளிநாட்டு குடிமக்கள் கல்விச் சான்றிதழ்கள் முதலில் அவர்களின் சொந்த நாட்டில் அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும். அதன் பிறகே அமீரகத்தில் அட்டெஸ்ட் செய்ய முடியும்.
இந்த செயல்முறைக்கு 10 வேலை நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஆனால், சொந்த நாட்டில் ஏற்கனவே அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களுக்கான செயல்முறை 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த புதிய டிஜிட்டல் சேவையின் மூலம், அனைத்து செயல்பாடுகளும் மிக விரைவாகவும் எளிதாகவும் நடைபெறும்.
இந்த திட்டம், வேலை அனுமதிப் பரிந்துரைகளை வழங்கும் செயல்முறையில் நேரடி ஒருங்கிணைப்புடன் செயல்படும். தொழிலாளர்களிடையே தொழில்முறை தரத்தை மேம்படுத்தும் வகையில், வேலைவாய்ப்பு துறையில் நம்பகத்தன்மையையும் திறமையையும் உறுதி செய்யும் முக்கிய சாதனையாக இது அமையும்.
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை தடுக்கும் முயற்சி:
MoHRE இல் தொழிலாளர் சந்தை மற்றும் எமிரேடிசேஷன் செயல்பாடுகளின் துணைச் செயலாளர் கலீல் அல் கூரி, “தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளைத் தடுப்பதற்கான” அதன் முயற்சிகளில் அமைச்சகத்தின் ஒழுங்குமுறை அமைப்பை இந்த திட்டம் ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அமைப்புகளின் ஒத்துழைப்பில் முன்னேறும் அரசு சேவை:
உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகத்துடன் (MoHESR) இணைந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சி, வளர்ந்து வரும் தொழிலாளர் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், தொழிலாளர்களிடையே தொழில்முறை தரங்களை நிலைநிறுத்தும், தொழிலாளர் சூழலை ஆதரிப்பதில் அமீரகத்தின் பங்கை மேம்படுத்தும் வேகமான மற்றும் நம்பகமான அரசு சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும்.
மேலும், இந்த திட்டத்திற்கு டிஜிட்டல் உள்கட்டமைவு ஆதரவை தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) வழங்குகிறது.
MoHESR-இன் துணை செயலாளரான டாக்டர் முகம்மத் அல் முஅல்லா கூறியதாவது, “புதிய திட்டம் கல்வித் தகுதி சரிபார்ப்பு செயல்முறையின் வேகம், துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். இந்த புதுமையான சேவையைத் தொடங்குவது பூஜ்ஜிய அரசு அதிகாரத்துவத் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான எங்கள் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது,” என்று அவர் கூறினார்.
