அபுதாபி AI நீரூற்று முதல் விசா புதுப்பிப்பு அப்டேட் வரை இந்த வாரம் நடைபெற்ற முக்கிய அறிவிப்புகள்!

இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான செய்திகள்!

இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கட்டுப்பாடு மையம்!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 4 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சுயமாக பாஸ்போர்ட் முத்திரையிட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில், குழந்தைகளை அவர்களை கவரும் வகையில் பிரத்யேக பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென்றே பிரத்யேகமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு மையத்தில் குழந்தைகளை கவரும் பொம்மை கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பான நாடுகளில் அமீரகம் முதலிடம்!

நம்பியோ வலைத்தளம் வெளியிட்டுள்ள 2025 அரையாண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் நம்பியோ வெளியிட்ட தரவரிசையில் அமீரகம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 85.2 புள்ளிகளுடன் அமீரகம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அமீரகத்திற்கு அடுத்த இடங்களில் அன்டோரா, கத்தார், தைவான் மற்றும் மக்காவ் (சீனா) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா, 55.8 புள்ளிகள் பெற்று 67வது இடத்தில் உள்ளது.

அபுதாபியில் AI நீரூற்று காட்சி!

அபுதாபியில்  அல் மரியா தீவில் தொடங்கப்பட்டுள்ள புதிய வாட்டர் ஃப்ரண்ட் திட்டத்தில் (Water Front Project) 30 மீ உயரமுள்ள ஒளி வீசும் பந்தை சுற்றி, AI மூலம் இயங்கும் 1,000 நீரூற்றுகள் இசைக்கு ஏற்ப நடனமாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 புகழ்பெற்ற இசையமைப்பாளர் ராமீன் ஜவாடி இசையில், 75 மீட்டருக்கும் மேல் எழும். இதை துபாய் நீருற்றை உருவாக்கிய WET நிறுவனம் வடிவமைத்துள்ளது. முபாதலா முதலீட்டு நிறுவனம் PJSC (Mubadala) ஜூலை 20 அன்று அல் மர்யா நீர்முனை மேம்பாட்டு திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை அறிவித்தது.

விசா புதுப்பிப்பதில் புதிய அப்டேட்!

துபாயில் வசிப்பவர்கள் இனிமேல் தங்கள் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தினால் மட்டுமே தங்கள் விசாக்களைப் புதுப்பிக்கவோ, ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியும் என்று துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) தலைவர் அறிவித்துள்ளார். அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், குடியிருப்பு & வெளிநாட்டினர் விவகார இயக்குநரகத்தின் (GDRFA) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் முகமது அகமது அல் மர்ரி கூறுகையில், குடியிருப்பாளர்கள் உள்ளூர் சட்டங்களை மதிக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள அபராதங்களுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். போக்குவரத்து அபராதம் பெரிய தொகையாக இருந்தால், அவர்கள் அதை தவணையாக செலுத்தலாம் என்றார்.

வங்கிகளில் OTP-க்கு பதில் App Verification!

பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அமீரக மத்திய வங்கி ஜூலை 25, 2025 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒருமுறை கடவுச்சொற்களை (OTP), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் (email) வழியாக அனுப்புவதை படிப்படியாக நிறுத்தப் போகின்றன.

 இதற்கு மாற்றாக  மொபைல் பேங்கிங் செயலிகள் வழியாக அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். அமீரக மத்திய வங்கியின் உத்தரவின் பேரில், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பண பரிவர்த்தனைகளில் இந்த புதிய நடைமுறையை படிப்படியாக வங்கிகள் தொடங்குகிறது.

2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பண பரிவர்த்தனைகளில் OTP பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்த அமீரக மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.  இந்த முயற்சியால், SMS மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்படும் OTP-ஆல் ஏற்படும் சைபர் குற்றங்கள் குறைக்கும் என கூறப்படுகிறது.

மால்களில் நடைப்பயிற்சி செய்யலாம்:

கோடையில் மக்களை தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் துபாயில் உள்ள மால்களில் இலவசமாக நடைப்பயிற்சி செய்யும் ‘துபாய் மாலத்தான்’ திட்டத்தை துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொள்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை. முன்பதிவு & முழு விவரங்களுக்கு: www.dubaimallathon.ae

TAGGED: