🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாய் வாட்ச் வீக்: தனது முதல் வாட்ச் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் தனுஷ்!

துபாயில் நவம்பர் 19 முதல் 23 வரை துபாய் வாட்ச் வீக் (Dubai Watch Week) நடைபெற்று வருகிறது. உலகளாவிய கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகார கலாச்சாரத்திற்கான இந்நிகழ்வு அஹ்மத் செடிகி & சன்ஸ் நிறுவனத்தால் 2015-ல் தொடங்கப்பட்டது.

துபாய் வாட்ச் வாரம்:

இந்த நிகழ்வில், உலகெங்கிலும் இருந்து பல கடிகார உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் சிறப்பு வெளியீடுகளைக் கண்டுகளிக்கிறார்கள். 2025-க்கான நிகழ்வு  துபாய் மாலில் உள்ள பர்க் பார்க்கில் நடைபெற்றது. 

தனுஷின் முதல் வாட்ச்:

இதில் நவம்பர் 20 அன்று நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அங்கு பேட்டியளித்த அவர் தனக்கு மிகவும் பிடித்த தனது முதல் வாட்ச் குறித்து பகிர்ந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “என்னுடைய முதல் வாட்ச் என் அம்மா வாங்கி கொடுத்த டிஜிட்டல் பிளாஸ்டிக் வாட்ச்  தான். அது கலர்கலராக இருக்கும். அதில் லைட் எரியும். பேட்டரி காலியானால் வாட்ச் இயங்காது. இருப்பினும் அதை பள்ளிக்கு செல்லும் போது கட்டிக்கொள்வேன். இப்போதும் அந்த வாட்ச் வீட்டில் என்னிடம் உள்ளது” என்றார்.

உலகின் பழமையான மொழி தமிழ்:

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். உலகின் பழமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. ஒய் திஸ் கொலவெறி பாடல் முழுக்க முழுக்க தமிழ் கிடையாது. தங்கிலிஷில் எழுதப்பட்டுள்ளது. 

இது விளையாட்டாக எழுதிய பாடல். இப்பாடலுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால் உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.  நான் அந்த பாடலை விட்டு விலகி சென்றாலும், அந்த பாடல் விடாமல் என்னை துரத்தி வருகிறது” என்று கூறினார். 

கிரிக்கெட் வீரருடன் ஏர் ஹாக்கி விளையாடிய தனுஷ்!

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் தனுஷும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனும் ஏர் ஹாக்கி விளையாடினார்கள்.

தனுஷ் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் அவரவர் துறைகளில் சிறந்தவர்கள். இவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டு ஏர் ஹாக்கி விளையாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் இப்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.