அமீரகம் தனது சுற்றுலாத்துறையில் மற்றுமொரு சாதனை ஆண்டை பதிவு செய்துள்ளதாக துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமீரக சுற்றுலா கவுன்சிலின் 2025ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு அறிக்கையை துபாய் ஆட்சியாளர் அண்மையில் வெளியிட்டார். அதன்படி, 2025ஆம் ஆண்டில் அமீரகம் முழுவதும் 32 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல் விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் உலகிலேயே மிக உயர்ந்த ஹோட்டல் தங்கும் விகிதங்களை தக்கவைத்து கொண்ட நாடுகளின் பட்டியலில் அமீரகம் முன்னிலையில் உள்ளது.
வருவாயில் முத்திரை பதிக்கும் தங்கும் விடுதி தொழில்
அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் அமீரகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் 49.2 பில்லியன் திர்ஹம்க்கும் (AED) அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியாகும்.
தற்போதைய நிலவரப்படி, அமீரகம் முழுவதும் உள்ள 1,240-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 2,17,000-க்கும் அதிகமான அறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆண்டு முழுவதும் சராசரி ஹோட்டல் தங்கும் விகிதம் (Occupancy Rate) 79.5 சதவீதத்தை எட்டியுள்ளது. இது பிராந்திய அளவிலும் உலகளவிலும் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். மேலும், 2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 100 மில்லியன் ஹோட்டல் இரவுகள் (Hotel nights) பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமீரகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு சுற்றுலாத்துறை
விடுதி அறைகளின் பயன்பாடும், உலகெங்கிலும் இருந்து வரும் பார்வையாளர்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது உலகின் முன்னணி சுற்றுலா மற்றும் பயண தலங்களில் ஒன்றாக அமீரகம் திகழ்வதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அமீரகத்தின் ஏழு எமிரேட்களிலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கலாச்சாரத் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா அனுபவங்கள் ஆகியவற்றில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம், நாட்டின் பொருளாதார பன்முகத்தன்மை உத்தியின் மிக முக்கியத் தூண்களில் ஒன்றாக சுற்றுலாத்துறை தொடர்ந்து விளங்கி வருகிறது.
