வளைகுடா பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் 18 ஆண்டுகால ஆட்சி, சிறிய நாடாக இருந்த கத்தாரை உலக அரங்கில் முக்கிய இடம் பெறச் செய்ததுடன், அதன் தலையெழுத்தையே மாற்றியமைத்தது.
அரசர்கள் உயிருடன் இருக்கும் வரை பதவியில் நீடிப்பதே வளைகுடா நாடுகளின் மரபாக இருந்த சூழலில், உயிருடன் இருக்கும்போதே தாமாக முன்வந்து ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைத்த முதல் வளைகுடா அரசர் என்ற வரலாற்றுப் பெருமை இவரையே சாரும்.
நவீன கத்தாரின் தந்தை
ஷேக் ஹமத் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, கத்தார் தனது அண்டை நாடான சவூதி அரேபியாவின் நிழலிலேயே இயங்கி வந்தது. எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த ஒரு சிறிய வளைகுடா நாட்டை, உலகமே வியந்து பார்க்கும் பொருளாதார மற்றும் ராஜதந்திர வல்லரசாக மாற்றியவர் ஷேக் ஹமத். இதனால் இவர் ‘நவீன கத்தாரின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
1995-ஆம் ஆண்டு, அப்போதைய கத்தார் அமீரும் இவருடைய தந்தையுமான ஷேக் கலீஃபா பின் ஹமத் அல் தானி ஸ்விட்சர்லாந் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், எவ்வித வன்முறையுமின்றி அல் தானி அரச குடும்பத்தினரின் முழு ஆதரவோடு ஷேக் ஹமத் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த அமைதியான ஆட்சி மாற்றம் கத்தாரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.
கத்தாரின் North Field இயற்கை எரிவாயு வளத்தை முழுமையாக பயன்படுத்தி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியில் அந்நாட்டை உலகின் முன்னணி நாடாக மாற்றினார். இதன் மூலம் அவரது 18 ஆண்டுகால ஆட்சியில் கத்தாரின் பொருளாதாரம் அபார வளர்ச்சி கண்டதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 20 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது.
Al Jazeera – கத்தாரின் சர்வதேச ஊடகப் புரட்சி
ஷேக் ஹமத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக 1996-ஆம் ஆண்டு அல் Al Jazeera செய்தி நிறுவனத்தைத் தொடங்கியது குறிப்பிடப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கிய அரபு ஊடகங்களுக்கு மத்தியில், நேரலை விவாதங்கள் மற்றும் புலனாய்வுச் செய்திகளுடன் அல் ஜசீரா தனித்துவமாக உருவெடுத்தது. மேலும், சவூதி அதிகாரிகளால் மூடப்பட்ட BBC Arabic பிரிவில் பணியாற்றிய 150-க்கும் மேற்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்களை தோஹாவில் உள்ள தனது அலுவலகத்தில் பணியமர்த்தினார். பின்னர், ஈராக் போர், இரண்டாவது Intifada மற்றும் Arab Spring போன்ற முக்கிய உலக நிகழ்வுகளை விரிவாகச் செய்தியாக வெளியிட்டதன் மூலம், Al Jazeera கத்தாருக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கையும் பெற்றுத் தந்தது.
2022 FIFA உலகக்கோப்பையின் அடித்தளம்
ஷேக் ஹமத் உருவாக்கிய வலுவான பொருளாதார கட்டமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையே, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை கத்தார் மிகப்பிரம்மாண்டமாக நடத்த காரணமாக அமைந்தது. இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை 2010-ஆம் ஆண்டிலேயே கத்தார் வென்றெடுத்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பதவித் துறப்பு
வழக்கமாக வளைகுடா நாட்டு அரசர்கள் இறக்கும் வரை பதவியில் நீடிப்பதே வழக்கமாக இருந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு ஷேக் ஹமத் தாமாகவே முன்வந்து ஆட்சியைத் தனது நான்காவது மகனான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் ஒப்படைத்தார். பிராந்திய அளவில் இது சலசலப்பை ஏற்படுத்தி நிலையிலும், அமைதியான முறையில் அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து வளைகுடா வரலாற்றில் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
