தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்குத் தொழில் கடன், அவசர நிதி: துபாய் ஈமான் அமைப்பு கோரிக்கை

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்குத் தொழில் கடன் உதவி, குறைந்த கட்டணத்தில் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் அவசர கால நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஈமான் கலாச்சார மையம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.

அமீரக – இந்திய பிரதிகளுடனான சந்திப்புக்கூட்டம் 

அமீரகத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன், அமீரகத்தில் செயல்படும் இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனான தொடர்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் Pravasi Bharatiya Divas 2027 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் மற்றும் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது

ஈமான் அமைப்பின் கோரிக்கைகள் 

துபாயில் நடைபெற்ற இந்தியச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் பங்கேற்ற அதன் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் பங்கேற்று புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் சார்ந்த பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்:

பாஸ்போர்ட் புதுப்பித்தல் எளிமையாக்கம்:

பாஸ்போர்ட் புதுப்பித்தலின் போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, முறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்.

அவசர கால நிதியுதவி மற்றும் சிறு கடன் திட்டம்:

புவிசார் அரசியல் சூழல்கள், திடீர் வேலை இழப்பு, சம்பள பாக்கி மற்றும் மருத்துவ அவசரநிலைகளின் போது குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில் அவர்களுக்கு உடனடியாக உணவு, நிதியுதவி மற்றும் தாயகம் திரும்புவதற்கான பயண உதவியை வழங்கும் வகையில் ‘அவசரக்கால சிறு கடன் திட்டத்தை’ அரசு உருவாக்க வேண்டும்.

மலிவு விலையிலான NRI காப்பீட்டுத் திட்டம்:

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களின் விபத்து, திடீர் உடல்நலக் குறைவு மற்றும் அவர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்த பிரீமியத்தில் விரிவான NRI காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆட்சேர்ப்பு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி:

போலியான விசா மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகளில் இந்தியத் தொழிலாளர்கள் ஏமாறுவதைத் தடுக்க, இந்தியாவில் உள்ள முக்கியப் பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் மையங்களை அதிகரிக்க வேண்டும். வெளிநாடு புறப்படும் முன்பே விசா, பணி ஒப்பந்தம் மற்றும் சம்பள விவரங்களை தொழிலாளர்கள் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தாயகம் திரும்புவோருக்கு தொழில் கடன் மற்றும் திறன் பயிற்சி:

வெளிநாட்டிலிருந்து பணி முடிந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்கள் தங்களது அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்திச் சொந்தமாகச் சிறு தொழில்களைத் தொடங்க, அரசு சார்பில் சிறு தொழில் கடன்களும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.

தேசிய அளவில் “கிராமங்களை தத்தெடுக்கும்” CSR திட்டம்:

தமிழ்நாட்டின் “எனது கிராமம்” திட்டத்தைப் போல, வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர்கள் தங்களது சொந்த ஊர்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்தும் “Adopt a Village” CSR திட்டத்தை தேசிய அளவில் விரிவுபடுத்தி அரசு ஊக்குவிக்க வேண்டும்.

PBD 2027 ஆலோசனைகள்:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினருடன் இணைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் ‘பிரவாசி பாரதிய திவஸ் (PBD) 2027’ மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அதில் இந்திய சமூகத்தின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

TAGGED: