துபாயில் தெருப்பூனைகளின் பசி போக்க புதிய திட்டம், ‘DubaiNow’ செயலி மூலம் பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம்!

துபாயில் உள்ள தெரு பூனைகளுக்கு உணவு வழங்க, DubaiNow மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் நிதியுதவி அளிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

துபாய் நகரில் சுற்றித்திரியும் தெருப்பூனைகளின் நலனைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு முறையான உணவு மற்றும் நீர் கிடைப்பதை உறுதி செய்யவும் துபாய் அரசாங்கம் பல்வேறு நவீன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் ‘ஸ்மார்ட் உணவளிக்கும் மையங்கள்’ (Smart Feeding Stations) அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 

தற்போது இந்த உன்னதமான திட்டத்தில் துபாய் மக்களும் நேரடியாகப் பங்கேற்கும் வகையில், பூனைகளின் உணவுக்கான நிதியுதவியை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய வசதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை Digital Dubai மற்றும் முகமது பின் ரஷீத் உலகளாவிய அறக்கட்டளை ஆலோசனையகமும்’ (MBRGCEC) இணைந்து உருவாக்கியுள்ளன.

எப்படி நன்கொடை வழங்குவது?

துபாய் மக்கள் தங்களது கைபேசியில் உள்ள DubaiNow மொபைல் செயலி மூலம் தெரு பூனைகளுக்கான உணவு மற்றும் குடிநீருக்காக மிக எளிதாக நன்கொடை வழங்கலாம். இதற்காக செயலியில் உள்ள ‘Ehsan Feeding Stations’ சேவையைத் தேர்வு செய்து, தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக செலுத்தலாம். 

பொதுமக்கள் குறைந்தபட்சமாக AED 10 முதல் தங்களுக்கு விருப்பமான எந்தத் தொகையையும் நன்கொடையாக வழங்க முடியும். நன்கொடை செலுத்த விரும்புவோர், தங்களது UAE Pass கணக்கின் மூலம் DubaiNow செயலியில் உள்நுழைந்து, எளிதாக பணம் செலுத்தலாம். நன்கொடை செலுத்தப்பட்டதும், அதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி (SMS) பயனரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

TAGGED: