இஸ்லாமிய பயணிகள் பயணிக்க விரும்பும் நாடு, உலகில் 6-வது இடம் பிடித்த UAE

2026-ஆம் ஆண்டில், இஸ்லாமியர்கள் பயணிக்க உகந்த சூழலைக் கொண்ட உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில், UAE 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாஸ்டர்கார்டு மற்றும் கிரசெண்ட் ரேட்டிங் இணைந்து வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முஸ்லிம் பயணக் குறியீடு (Global Muslim Travel Index – GMTI) அறிக்கையின்படி, இஸ்லாமிய பயணிகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகளின் பட்டியலில் அமீரகம் உலக அளவில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹலால் உணவு வசதிகள் மற்றும் தொழுகைக்கான இடங்கள் எளிதாகக் கிடைப்பதில், அமீரகம் 100-க்கு 100 முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது. மேலும், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள், சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் எளிமையான விசா நடைமுறைகள் ஆகியவை பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதால் இந்த இடத்தைப் பெற்றுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கிலம், அரபி மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பிரத்யேக சேவைகளையும் அமீரகம் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய பயணிகளுக்குத் தேவையான வசதிகளை சிறப்பாக வழங்கும் உலகின் 27 முன்னணி நாடுகள் இடம்பெற்றுள்ள Trailblazers பிரிவிலும் அமீரகம் இடம்பிடித்துள்ளது.

உலகளாவிய இஸ்லாம் சுற்றுலா சந்தையின் வளர்ச்சி

உலகளவில் இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 208 மில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 262 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகளின் மொத்த சுற்றுலா செலவு ஆண்டுக்கு சுமார் 310 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மேலும், சுற்றுலா செல்லும் இஸ்லாமிய பயணிகளில் 80% பேர் தங்களது பயணத் திட்டங்களை வகுக்க செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றின் மூலம் ஹலால் உணவகங்களைக் கண்டறிதல், தொழுகைக்கான இடங்களைத் தேடுதல் மற்றும் பயண வழிகளை ஒப்பிடுதல் போன்றவற்றை எளிதாக மேற்கொள்கின்றனர். எனவே, டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்தத் தவறும் நாடுகள், ஹலால் சுற்றுலாத் துறையில் போட்டித்திறனை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய முஸ்லிம் பயணக் குறியீடு டாப் 10 தரவரிசை

இடம்நாடு
1மலேசியா
2இந்தோனேஷியா
3சவூதி அரேபியா
4துருக்கி
5கத்தார்
6ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
7பஹ்ரைன்
8ஈரான்
9குவைத்
10ஓமன்

TAGGED: