$3.3 மில்லியன் பரிசுத்தொகை கொண்டதுபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது; பங்கேற்பது எப்படி?

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உலகிலேயே மிக அழகிய குரலில் குர்ஆன் ஓதுபவர்களைக் கண்டறிந்து கௌரவிக்கும் $3.3 மில்லியன் பரிசுத்தொகை கொண்ட “துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருது” போட்டிக்கான புதிய பதிப்பை அறிவித்துள்ளார்.

இது குறித்த தனது எக்ஸ் பதிவில், ”அல்லாஹ்வின் அருளாலும் வழிகாட்டுதலாலும், இன்று துபாய் சர்வதேச புனித குர்ஆன் விருதின் புதிய பதிப்பை தொடங்கி வைக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

மொத்தம் 3 பிரிவுகளில் இந்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

போட்டிப் பிரிவுகளும் தகுதிகளும்

1. முதல் பிரிவு: 

  • 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள்  பங்கேற்கலாம். 
  • திருக்குர்ஆனை முழுமையாக, தஜ்வீத் (Tajweed) விதிகளுடன் ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
  • மே 31, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • முந்தைய போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவராகவோ அல்லது விருது பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
  • போட்டியின் போது தங்கள் நாட்டின் பாரம்பரிய உடையை அணிய வேண்டும்.
  • பரிசுகள்: முதல் இடம் – $1 மில்லியன், இரண்டாம் இடம் – $100,000, மூன்றாம் இடம் – $50,000.

2. இரண்டாம் பிரிவு: 

  • 16 வயது மற்றும் அதற்கு உட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பங்கேற்கலாம். 
  • திருக்குர்ஆனை முழுமையாக, தஜ்வீத் விதிகளுடன் ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஜூன் 1, 2010 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும் (16 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்).
  • முந்தைய போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவராகவோ அல்லது விருது பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
  • பரிசுகள்: முதல் இடம் – $1 மில்லியன், இரண்டாம் இடம் – $100,000, மூன்றாம் இடம் – $50,000.

3. மூன்றாம் பிரிவு: 

  • இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சிறந்த சேவை செய்தவராக இருக்க வேண்டும்.
  • சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் மற்றும் சிறந்த கல்வி/ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.
  • பரிசு: $1 மில்லியன் டாலர்.

இந்த ஆண்டு புதிய மாற்றங்கள் என்ன?

நேரடி விண்ணப்பம்:

 நாடுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை மாறி, தகுதியுள்ள நபர்கள் இப்போது நேரடியாகத் தங்களே விண்ணப்பிக்கலாம்.

தராவீஹ் தொழுகை மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவு: 

இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் சிறந்த போட்டியாளர்கள் துபாய்க்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள பெரிய மசூதிகளில் ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகையை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகு, உலகிலேயே மிக அழகான குரலில் குர்ஆன் ஓதுபவரைத் தேர்ந்தெடுக்கப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை 

ஆண்கள் பிரிவு (16 வயதுக்கு மேல்):

  • முதல் சுற்று (ஜூலை 7 – ஆகஸ்ட் 15, 2026): நீங்கள் அனுப்பும் 3 நிமிட வீடியோவின் குரல் வளம் மற்றும் தஜ்வீத் முறையை வைத்துத் தேர்வு செய்வார்கள்.
  • இரண்டாம் சுற்று (பிப்ரவரி 8 – 16, 2027): துபாயில் தராவீஹ் தொழுகை நடத்த அழைக்கப்படுவார்கள். பொதுமக்கள் வாக்குகள் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவு (16 வயதுக்கு கீழ்):

  • முதல் சுற்று (ஜூலை 7 – ஆகஸ்ட் 15, 2026): அனுப்பப்பட்ட வீடியோக்கள் மூலம் குரல் வளம் மதிப்பீடு செய்யப்படும்.
  • இரண்டாம் சுற்று (செப்டம்பர் 1 – 14, 2026): ஆன்லைன் மூலமாக நேரடி வீடியோ காலில் (Virtual Call) தேர்வு நடக்கும்.
  • மூன்றாம் சுற்று (பிப்ரவரி 8 – 16, 2027): பொதுமக்களின் வாக்குப்பதிவு மூலம் இறுதி வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

இதன் இறுதிப் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி 2027 ரமலான் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.