🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

கலையால் கல்வி ஊட்டிய இந்திய ஆசிரியை ரூபிள் நாகிக்கு துபாயில் விருது!

துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை மும்பையை சேர்ந்த ரூபிள் நாகிக்கு துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வழங்கினார். 

உலக அரசாங்க உச்சி மாநாடு:

துபாயில் உலக அரசாங்க உச்சி மாநாடு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு விருதுகள்:

அதன் ஒரு பகுதியாக கல்வித்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய மும்பையை சேர்ந்த ஆசிரியை ரூபிள் நாகிக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது மற்றும் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) பரிசு தொகை வழங்கப்பட்டது. 

யார் இந்த ஆசிரியை ரூபிள் நாகி? 

ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் உள்ள ‘ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்’ கல்லூரியில் பயின்றார். கலையை கற்றலுக்கான நுழைவாயிலாக பயன்படுத்தும் இவர், ரூபிள் நாகி கலை அறக்கட்டளை மூலம் இந்தியா முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுவர்களில் கற்றல், வாசித்தல், எழுதுதல் குறித்த ஓவியங்களை வரைந்து கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கியுள்ளார். இதில் 600 தன்னார்வலர்களையும் ஆசிரியர்களையும் திரட்டி 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு கலை சார்ந்த கல்வியை வழங்கியுள்ளார். 

இந்த 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில் இலவசத் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி குறித்து கற்பிக்கும் கல்வி நிறுவனத்தை உருவாக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஆயிரத்தில் ஒருவர் 

உலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்காக 139 நாடுகளிலிருந்து வந்த 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ரூபிள் நாகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை பெறும் பத்தாவது ஆசிரியர் இவர் ஆவார். 

கடந்த ஆண்டு உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை சவுதி அரேபியாவை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் பின் அப்துல்லா அல்-மன்சூர் வென்றார். கல்வி மூலம் நூற்றுக்கணக்கான ஆதரவற்றவர்கள் மற்றும் கைதிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.