அபுதாபி எதிஹாட் ரயில் நிலையத்தை இணைக்க 2 புதிய பேருந்து சேவை அறிமுகம்

அபுதாபியின் முக்கிய பேருந்து நிலையங்களை எதிஹாட் ரயில் நிலையத்துடன் இணைக்கும் MR1 மற்றும் MR2 ஆகிய இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களை அபுதாபி மொபிலிட்டி (Abu Dhabi Mobility) அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிஹாட் ரயில் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி ரயில் நிலையத்திலிருந்து நகரத்தின் பிற பகுதிகளுக்கும், அங்கிருந்து ரயில் நிலையத்திற்கும் விரைவாகச் சென்று வரும் வகையில் Mohammed bin Zayed City ரயில் நிலையத்தை, Main பேருந்து நிலையம் மற்றும் Al Zahya பேருந்து நிலையத்துடன் இருவழிப் பயண வசதியுடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. 

அதன்படி, Mohammed bin Zayed City ரயில் நிலையம் –  Main பேருந்து நிலையம் (இருவழி) இடையேயான வழித்தடம் MR1 எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், Mohammed bin Zayed City ரயில் நிலையம் –  Al Zahya பேருந்து நிலையம் (இருவழி) இடையேயான வழித்தடம் MR2 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் தினமும் மொத்தம் ஆறு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், ஒவ்வொரு திசையிலும் தலா மூன்று சேவைகள் வழங்கப்படும்.

பயணிகள் தங்கள் பயணங்களை எளிதாக நிறைவு செய்வதற்கு ஏதுவாக, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களுக்கு ஏற்ப பேருந்து மற்றும் டாக்சி சேவைகளை ஒருங்கிணைக்க, எதிஹாட் ரயில் நிறுவனம் பொதுப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

பயணிகள், முகமது பின் சயீத் நகர ரயில் நிலையத்திலிருந்து கார்னிச் ரோடு வெஸ்டில் உள்ள ADNOC தலைமையகம், ADNEC சென்டர், ரீம் மால் உள்ளிட்ட அபுதாபியின் முக்கிய இடங்களுக்கு செல்ல AED 10 கட்டணத்தில் இயக்கப்படும் ஷட்டில் பேருந்து சேவையையும் பயன்படுத்தலாம். இந்த ஷட்டில் பேருந்துக்கான முன்பதிவை எதிஹாட் ரெயில் செயலி அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.

TAGGED: