ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கிய போக்குவரத்து திட்டமான எதிஹாத் ரயில் (Etihad Rail), தனது புதிய பயணிகள் ரயில் சேவைக்கான முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் பயண விதிகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
ஜூன் 30 முதல் அபுதாபி மற்றும் புஜைரா இடையே முதற்கட்ட பயணிகள் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அமீரகத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தத் திட்டமிடும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக, டிக்கெட் முன்பதிவு, பயண விதிகள் மற்றும் ரயிலில் அனுமதிக்கப்படும் பொருட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிஹாட் ரயில் பயணத்திற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:
- பயணச்சீட்டு இருக்க வேண்டும்.
- பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடி கட்டாயம்.
- டிக்கெட்டை பிரிண்ட் செய்ய தேவையில்லை. மொபைலில் இருக்கும் டிஜிட்டல் டிக்கெட் போதுமானது. பிரிண்ட் செய்யப்பட்ட நகல்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
- ரயில்களின் கால அட்டவணையை எதிஹாட் ரயில் செயலி, இணையதளம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள திரைகளில் பார்த்துக் கொள்ளலாம்.
- ரயிலில் ஏறுவதற்கு முன் டிக்கெட் எடுத்திருப்பது கட்டாயம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது.
- நிலையங்களில் உள்ள வெண்டிங் மெஷின்கள் (Vending machines) மூலம் டிக்கெட்கள் வாங்கலாம். ஆனால், சில குறிப்பிட்ட கட்டண வகைகள் இதில் கிடைக்காமல் போகலாம். ரயில் புறப்படுவதற்கு சற்று முன்பாக இந்த விற்பனை நிறுத்தப்படும்.
- செயலி அல்லது இணையதளம் மூலம் புக் செய்யும்போது பயணிகளுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுக்கலாம். டிக்கெட் வகையைப் பொறுத்து இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் அல்லது இலவசமாக இருக்கலாம்.
- மற்றவர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்யும்போது அவர்களின் விவரங்களை உள்ளிட்டு, இ-டிக்கெட்டை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
- வாங்கிய டிக்கெட் வகை மற்றும் இடங்கள் இருப்பதைப் பொறுத்து மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்படும். செயலி, இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் இதைச் செய்யலாம்.
- ரீஃபண்ட் (Refund) என்பது வாங்கிய டிக்கெட் வகையைப் பொறுத்தது. சில டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்பக் கிடைக்காது, ஆனால் ‘Flex’ வகை டிக்கெட்டுகளுக்கு சில நிபந்தனைகளுடன் பணம் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.
- ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பாக வர பரிந்துரைக்கப்படுகிறது. ரயில் புறப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பே நுழைவு வாயில்கள் மூடப்படும்.
- டிக்கெட் தேர்ந்தெடுத்த வழித்தடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். வேறு நிலையத்திலிருந்து பயணிக்க வேண்டுமானால், புதிய டிக்கெட் வாங்க வேண்டும்.
- ரயில் தரப்பில் தாமதம் இருந்தால், கூடுதல் கட்டணமின்றி அடுத்த ரயிலில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும்.
- பயணத்தின் போது டிக்கெட்டை நீட்டிக்க முடியாது. புக் செய்த தூரத்திற்கு மட்டுமே டிக்கெட் செல்லுபடியாகும். அதற்கு மேல் பயணிக்க வேண்டுமானால் புதிய டிக்கெட் வாங்க வேண்டும்.
- சுற்றுலாப் பயணிகளும் எதிஹாட் ரயிலில் பயணிக்கலாம். டிக்கெட்டில் உள்ள பெயருடன் ஒத்துப்போகும் பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது.
- 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தனியாகப் பயணிக்கலாம். அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்குப் பெரியவர்களின் துணை கட்டாயம்.
- ரயில் நிலையங்களும் ரயில்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரயிலில் இதற்கென பிரத்யேக இடங்கள் உள்ளன. பயணிகள் தங்களின் சொந்த சக்கர நாற்காலிகளை எடுத்து வரலாம்.
- செல்லப்பிராணிகளை ரயிலில் எடுத்து வரலாம். ஆனால் அளவுகளுக்கு உட்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கூண்டுகளில் மட்டுமே கொண்டு வர வேண்டும். ஒரு பயணிக்கு ஒரு செல்லப்பிராணி கூண்டு மட்டுமே அனுமதி.
- குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளை (Strollers) கொண்டு வரலாம்.
- இ-ஸ்கூட்டர்கள் உட்பட எந்தவொரு ஸ்கூட்டரும் எதிஹாட் பயணிகள் ரயிலில் அனுமதிக்கப்படாது.
- பயணம் முழுவதும் இலவச இணைய வசதி வழங்கப்படும்.
- ரயில்களில் உணவு மற்றும் பானங்கள் கிடைக்கும். பயணத்தின் போது சிற்றுண்டிகள் மற்றும் ஆல்கஹால் அல்லாத பானங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
- வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம். ஆனால் அதிக வாசனையுள்ள உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ரயிலுக்குள் ஆல்கஹால் (மதுபானம்) கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரயிலுக்குள்ளேயோ அல்லது ரயில் நிலையங்களுக்குள்ளேயோ புகைபிடிப்பதோ, வேப்பிங் (Vaping) செய்வதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
