அமீரகத்தின் முதல் பயணிகள் ரயிலான எதிஹாட் ரயிலின் முதல் சேவை ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதல் ரயில் அதிகாலை 5:34 மணிக்கு புஜைராவில் இருந்து புறப்பட்டு, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அபுதாபியின் முகமது பின் சயீத் சிட்டி நிலையத்தை வந்தடைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பயணத்தில் பங்கேற்பதற்காக, சில துபாய் வாசிகள் நள்ளிரவில் ஃபிஃபா உலகக்கோப்பை (FIFA World Cup) கால்பந்து போட்டிகளைப் பார்த்துவிட்டு, தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் காரில் புஜைரா வரை சென்று ரயிலைப் பிடித்தனர். இன்னும் சிலர் இதற்காகத் தங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து கலந்து கொண்டனர்.
முதல் நாளுக்கு முன்னரே சாதனை
இந்த முதல் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாகவே, 10,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிஹாட் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள மிகுந்த வரவேற்பு வெளிப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுத்துக்கொண்ட பயணிகள்
முதல் நாள் சேவையை முன்னிட்டு, ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக இலவச Photo Booth ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
எதிஹாட் ரயிலின் முதல் பயணி
ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எதிஹாட் ரயில் பயணிகள் சேவையின் முதல் பயணத்தில், முதல் பெட்டியின் முதல் சீட்டில் (Carriage 1, Seat 1) பயணம் செய்யும் பெருமையை மாற்றுத்திறனாளியான ஹமத் மன்சூர் அல் பலூஷி என்பவர் பெற்றுள்ளார்.
இவர், புஜைரா நகரிலிருந்து அபுதாபி வரை இயக்கப்பட்ட இந்த முதல் ரயிலில் பயணம் செய்தார். எதிஹாட் ரயில் நிறுவனம் “நம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பயணி” (The Passenger Who Represents Us All) என்ற பெயரில் நாடு தழுவிய ஒரு போட்டியை நடத்தியது.
சமூகத்திற்குத் தன்னலமின்றி சேவை செய்யும் ஒருவரைப் பரிந்துரைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டிருந்தது.
ஹமத்தின் சகோதரி இவருடைய பெயரைப் பரிந்துரைத்திருந்தார். நூற்றுக்கணக்கான பரிந்துரைகளில் இருந்து ஹமத் இறுதிப் பயணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிஹாட் ரயிலின் முதல் இந்திய கேப்டன்
கேரளாவின் ஆழப்புழாவைச் சேர்ந்த நிஷாத் (29), அமீரகத்தின் 200 கி.மீ வேகத்தில் செல்லும் ‘எதிஹாத் ரயில்’ (Etihad Rail) திட்டத்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
