துபாயில் நம்பர் பிளேட்கள் வெறும் வாகன அடையாளமாக மட்டுமல்ல, செல்வம் மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. சில தனித்துவமான நம்பர் பிளேட்கள் மில்லியன் கணக்கான திர்ஹம்களுக்கு விற்கப்படுவதுடன், காலப்போக்கில் அவற்றின் மதிப்பு உயர்வதால் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகின்றன.
துபாயில் வசிப்பவர்களுக்கோ அல்லது அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தவர்களுக்கோ, அதிசொகுசு கார்களையும், அவற்றைக் காட்டிலும் விசித்திரமான மற்றும் மதிப்புமிக்க நம்பர் பிளேட்டுகளையும் காண்பது புதியதொன்றல்ல. துபாயில் சொகுசு கார்களை விட, அவற்றின் நம்பர் பிளேட்டுகள் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது உலகப் புகழ்பெற்ற ஒரு விஷயமாகும்.
இங்குள்ள செல்வந்தர்கள் நம்பர் பிளேட்டுகளை உலகிலுள்ள மற்ற மனிதர்களைக் காட்டிலும் சற்றே வித்தியாசமான பார்வையில் அணுகுகிறார்கள். ஒரு நம்பர் பிளேட்டில் இலக்கங்கள் எவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அதன் விலையும் அதிகமாகும். நம்பர் பிளேட்டில் குறைவான எண்கள் இருப்பதோ அல்லது தனித்துவமான மற்றும் சீரான எண்களின் கலவை அமைந்திருப்பதோ, அங்குள்ளவர்களின் உயர்ந்த நிதி நிலைமையையும் சமூக அந்தஸ்தையும் காட்டும் முதன்மை அடையாளமாகக் கருதப்படுகிறது.
மூன்று இலக்க நம்பர் பிளேட்
மூன்று இலக்க நம்பர் பிளேட்டின் தனித்துவம் மற்றும் தேவையைப் பொறுத்து அதன் விலை AED 3,80,000 வரை நிர்ணயிக்கப்படும். ஆனால் “100” போன்ற தனித்துவமான எண்களுக்கு AED 1,550,000 அல்லது அதற்கு மேல் விலை நிர்ணயிக்கப்படும்.
இரண்டு இலக்க நம்பர் பிளேட்
இரண்டு இலக்க நம்பர் பிளேட்டின் விலை மூன்று இலக்க நம்பர் பிளேட்டை விட அதிகம். உதாரணமாக, “99” என்ற எண் கொண்ட பலகையின் விலை சுமார் AED 3,150,000 ஆகும்.
ஒரு இலக்க நம்பர் பிளேட்
ஒற்றை இலக்க நம்பர் பிளேட்டுகள் மிகவும் மதிப்புமிக்கவையாகக் கருதப்படுகின்றன. அவற்றின் விலை AED 10 மில்லியனில் இருந்து AED 50 மில்லியன் வரை அல்லது அதற்கும் மேல் உயரக்கூடும்.
உலகின் மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட்
உலகின் மிக விலையுயர்ந்த நம்பர் பிளேட் என்ற சாதனையை அமீரகத்தின் ‘P7’ என்ற நம்பர் பிளேட் பிடித்துள்ளது. இது ஒரு தொண்டு நிறுவன ஏலத்தில் AED 55 மில்லியனுக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்தது.
நம்பர் பிளேட்கள் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகின்றன
அமீரக மக்கள் இந்த நம்பர் பிளேட்களை வெறும் ஆடம்பரமாக மட்டும் பார்க்காமல், ஒரு சிறந்த முதலீடாகவும் கருதுகின்றனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, தனித்துவமான மற்றும் அரிய எண் பலகைகளின் மதிப்பு கணிசமாக உயர்கிறது. இதனால், முதலீடு செய்தவர்கள் பின்னர் இவற்றை இன்னும் பல மடங்கு அதிக விலைக்கு விற்று பெரும் லாபம் சம்பாதிக்கின்றனர்.
