இந்திய பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்றல்ல: இந்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை தொடர்பான விவாதங்கள் அரசியல் தளத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், இதுகுறித்து இந்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

பாஸ்போர்ட் குடியுரிமை சான்றல்ல!

இந்திய வெளியுறவு அமைச்சகம்  பாஸ்போர்ட் என்பது   ஒருவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான ஆவணம்  மட்டுமே. அதை ஒருவரது குடியுரிமைக்கான இறுதி ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தது.

வெளிநாட்டவர்களும் இந்திய பாஸ்போர்ட் வாங்கலாம்

1967-ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 20-ஐ (Section 20) அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விதியின்படி, பொது நலன் கருதி தேவைப்பட்டால், இந்தியக் குடிமகன் அல்லாத வெளிநாட்டவர் ஒருவருக்குக் கூட இந்திய அரசு பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்களை வழங்க சட்டத்தில் இடமுண்டு. எனவே, பாஸ்போர்ட் வைத்திருப்பதனாலேயே ஒருவர் இந்தியக் குடிமகன் ஆகிவிட முடியாது என்று அரசு விளக்கியுள்ளது.

மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும், “பாஸ்போர்ட் வைத்திருப்பது மட்டுமே ஒருவருக்குக் குடியுரிமையை உறுதி செய்துவிடாது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அதிகாரிகள் நினைவு கூர்ந்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சகத்தின் இந்த விளக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “பாஸ்போர்ட்டே குடியுரிமைக்குச் சான்றல்ல என்றால், நாட்டின் குடிமக்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க வேறு எந்த ஆவணத்தைத்தான் நம்புவது? இந்தச் சந்தேகங்கள் எதிர்காலத்தில் மக்களின் வாக்குரிமையைப் பாதிக்காதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“புதிய விதிமுறை எதுவும் இல்லை” – பாஜக விளக்கம்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள பாஜக தலைவர் அமித் மாளவியா, அரசு எந்தவொரு புதிய கொள்கையையோ அல்லது விதியையோ கொண்டுவரவில்லை என்று மறுத்துள்ளார். ஏற்கனவே சட்டப் புத்தகங்களிலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் உள்ள ஒரு தெளிவான சட்ட நிலையைத்தான் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது என்றார்.

இதுகுறித்து அவர் விளக்குகையில்: இந்தியக் குடியுரிமை என்பது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின்படி (Citizenship Act, 1955) மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. குடியுரிமையை நிரூபிக்கப் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ்கள், வாக்காளர் பட்டியல், நிலப் பதிவுகள் (Land Records) மற்றும் இதர அரசு அதிகாரப்பூர்வ ஆவணங்களின் தொகுப்பு தேவைப்படுகிறது.

பாஸ்போர்ட் என்பது ஒருவரது குடியுரிமைக்கான கோரிக்கைக்குத் துணையாக இருக்கலாமே தவிர, அதுவே தனித்தனி இறுதி ஆதாரமாகாது. இந்தியக் குடியுரிமை என்பது எப்போதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே இயங்குகிறது. பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்திற்கும் வெளிநாட்டுப் பயணத்திற்கும் அவசியமான ஆவணமே தவிர, அது தேசியத்தை (Nationality) தீர்மானிக்கும் இறுதி ஆவணம் அல்ல என்பதை மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.