ஜூலை 1 முதல் ஷார்ஜாவில் பார்க்கிங் நேரம் நீட்டிப்பு; நகராட்சி அறிவிப்பு!

ஷார்ஜா நகராட்சி பொது வாகன நிறுத்த கட்டண நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

எப்போது அமல்? 

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது.

ஷார்ஜா நகரம், கல்பா (Kalba), கோர்ஃபக்கான் (Khorfakkan) மற்றும் அல் தைத் (Al Dhaid) ஆகிய அனைத்துப் பகுதிகளில் உள்ள கட்டண பார்க்கிங் மண்டலங்களுக்கும் இது பொருந்தும்.

புதிய பார்க்கிங் நேரங்கள் 

இனிமேல் பார்க்கிங் கட்டணம் காலை 8:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை வசூலிக்கப்படும்.

முன்பு மஞ்சள் நிறப் பலகை (Yellow signs) கொண்ட பார்க்கிங் பகுதிகளில் குறைவான நேரமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இனிமேல், நீல நிறப் பலகை (Blue signs) கொண்ட பகுதிகளைப் போலவே, மஞ்சள் நிறப் பலகை பகுதிகளிலும் நள்ளிரவு 12 மணி வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்களில் வழக்கம் போல் பார்க்கிங் இலவசம். ஆனால், வாரத்தின் 7 நாட்களும் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புப் பார்க்கிங் மண்டலங்களுக்கு இந்த இலவசம் பொருந்தாது.

மாற்றத்திற்கான காரணம் 

பொது பார்க்கிங் துறையின் இயக்குநர் ஹமத் அல் கயீத்,  “ஷார்ஜாவின் நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஈடுகட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு வருபவர்கள் மற்றும் சீசன் சந்தாதாரர்கள் பார்க்கிங் இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

தேவையின்றி நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, வணிகப் பகுதிகளில் அனைவருக்கும் பார்க்கிங் இடம் கிடைப்பதை உறுதி செய்யவே  நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சந்தாதாரர்களுக்கான சலுகை

பார்க்கிங் நேரம் நீட்டிக்கப்பட்டாலும், சீசன் சந்தா கட்டணங்கள் உயர்த்தப்படாது, அவை முன்பிருந்தபடியே தொடரும்.

மாறாக, சந்தாதாரர்களுக்கு தினமும் கூடுதலாக 2 மணிநேர விலக்குக் காலம் கிடைக்கிறது (முன்பு 14 மணிநேரமாக இருந்த விலக்குக் காலம் இப்போது 16 மணிநேரமாக உயர்ந்துள்ளது).

கட்டணம் செலுத்தும் முறைகள்

குடியிருப்பாளர்கள் பின்வரும் டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தி எளிதாகப் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தலாம்:

SMS சேவை

Digital Sharjah செயலி 

ஷார்ஜா நகராட்சி வழங்கும் சீசன் சந்தாக்கள் 

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள சுமார் 1,24,000 கட்டண பார்க்கிங் இடங்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தும்.