அமீரகத்தில் உங்களுக்கு கிடைத்த வேலை வாய்ப்பு உண்மையானதா? தெரிந்துகொள்ள எளிய வழிகள்!

அமீரகத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஆனால், அந்த பணி நியமனக் கடிதம் உண்மையானதா என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். 

அமீரகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வேலை வாய்ப்புகளும் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MOHRE) மூலம் வழங்கப்பட வேண்டும்.

MOHRE அங்கீகாரம் பெற்ற வேலை வாய்ப்பு கடிதத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:

• பணியின் பெயர் (Job Title)

• நிறுவன எண் (Company Number)

• ஒப்பந்த வகை (Contract Type)

• சம்பள விவரங்கள்

• பணியில் சேரும் நாள்

• விடுமுறை விவரம்

• முன்னறிவிப்பு காலம் மற்றும் பிற நிபந்தனைகள்

மேலும், இந்த பணி நியமனக் கடிதத்தில் ஒரு  பிரத்யேக பார்கோடு (Barcode) அல்லது தனிப்பட்ட பரிவர்த்தனை எண் இடம்பெற்றிருக்கும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாடுகளில் இருந்து அமீரகத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர் முதலில் தங்கள் நாட்டில் உள்ள அமீரக தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொண்டு நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்யலாம்.

அல்லது MOHRE -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  உள்ள பரிவர்த்தனை விசாரணை சேவை  (Transactions Inquiry Service) மூலம் பணி நியமனக் கடிதம் சரிபார்க்கலாம்.

சரிபார்க்க  தேவையான விவரங்கள்:

• பரிவர்த்தனை எண் 

• நிறுவன எண் 

• நியமன  தேதி விவரங்கள்

• அனுமதி வகை (Permit Type)

இந்த விவரங்களை பதிவிட்ட பிறகு, உங்கள் நியமன கடிதம்  அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது திரையில் காண்பிக்கப்படும்.

வேலை ஏற்கும் முன் கவனிக்க வேண்டியவை!

நியமன கடிதத்தில் உள்ள சம்பளம், பதவி மற்றும் சலுகைகள் நிறுவனத்துடன் பேசிய விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

விசா, வேலைவாய்ப்பு அல்லது ஆவண செயல்முறைக்காக நிறுவனம் உங்களிடம் கட்டணம் கேட்கக்கூடாது. அமீரக சட்டப்படி அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்க வேண்டும். MOHRE வழங்கிய அதிகாரப்பூர்வ பார்கோடு அல்லது Transaction Number இருப்பதை உறுதி செய்யுங்கள்.

வேலை வாய்ப்பு கிடைத்த உடன் மகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன், சில நிமிடங்கள் ஒதுக்கி பணி நியமன கடிதம் சரிபார்ப்பது உங்கள் எதிர்கால வேலைப் பயணத்தை நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் தொடங்க உதவும்.

TAGGED: