அபுதாபி – புஜைரா எதிஹாட் பயணிகள் ரயில் சேவை ஜூன் 30 முதல் தொடக்கம்

அமீரக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எதிஹாட் ரயில் பயணிகள் சேவையின் முதல் கட்டம் அபுதாபி மற்றும் புஜைரா இடையே வரும் ஜூன் 30, 2026 முதல் தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 1 மணி 45 நிமிடங்களாக குறையவுள்ளது.

கட்டண விவரங்கள்

அபுதாபி – புஜைரா வழித்தடத்தில் பயணிக்க Comfort Class கட்டணம் AED 55 முதல் தொடங்குகிறது.Premium Class கட்டணம் AED 120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஜூன் 23 முதல் எதிஹாட் ரயில் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.etihadrail.ae/ மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

இந்த அறிவிப்பானது, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் அமைந்துள்ள முகமது பின் சயீத் நகர பயணிகள் ரயில் நிலையத்தை திறந்து வைத்தபோது வெளியிடப்பட்டது. 

மேலும், ரயில் நிலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் மேலாண்மை அமைப்புகள், பயணிகள் சேவை வசதிகள் மற்றும் கூட்ட நெரிசல் நேரங்களில் பயணிகள் இயக்கத்தை எளிதாக்கும் ஏற்பாடுகளை ஷேக் காலித் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

திறக்கப்படும் ரயில் நிலையங்கள்

துபாய் மற்றும் அல் தைத் (Al Dhaid) ரயில் நிலையங்கள் செப்டம்பர் 30, 2026 அன்று திறக்கப்படவுள்ளன.

டிசம்பர் 30, 2026 அன்று அல் தஃப்ரா (Al Dhafra) பகுதியில் உள்ள நிலையங்கள் சேவையில் இணைக்கப்படும்.

இறுதியாக, 2027 மார்ச் 30 அன்று ஷார்ஜா ரயில் நிலையம் திறக்கப்படுவதன் மூலம் முழுமையான பயணிகள் ரயில் வலையமைப்பு செயல்பாட்டுக்கு வரும்.

நவீன வசதிகளுடன் ரயில்கள்

இந்த பயணிகள் சேவைக்காக மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ரயிலும் சுமார் 400 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.

மேலும், ரயில் நிலையங்கள் மற்ற போக்குவரத்து சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், நகரங்களுக்கு இடையேயான பயணம் எளிதாகும்.

போக்குவரத்தில் புதிய ஆரம்பம்

எதிஹாட் ரயில் பயணிகள் சேவை, சாதாரண போக்குவரத்து திட்டமாக மட்டும் இல்லாமல், அமீரகத்தின் பல நகரங்கள், பொருளாதார மையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகக் கருதப்படுகிறது 

இந்த திட்டம் நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதுடன், முதலீடு, சுற்றுலா, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

TAGGED: