விலையுயர்ந்த வாட்ச்-கள் இருந்த பையை மீட்டுக்கொடுத்த துபாய் காவல்துறை
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் (Terminal 1) தனது பையைத் தவறவிட்ட வளைகுடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவரிடம், துபாய் காவல்துறை அவரது பையை மீட்டு பத்திரமாக ஒப்படைத்துள்ளது.
அந்தப் பையில் ஆடம்பர கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் இருந்தன. புகாரைப் பெற்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் தனிப்படையினர், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேடி பையைக் கண்டுபிடித்தனர்.
அந்தப் பையில் AED 103,880 மதிப்புள்ள 3 ஆடம்பர கடிகாரங்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட் இருந்தன. உரிமையாளரைச் சரிபார்த்து பை ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, துபாய் காவல்துறையின் அதிவேக மற்றும் தொழில்முறை நடவடிக்கையைப் பாராட்டி அந்தப் பயணி நன்றி தெரிவித்தார்.
சொத்துக்களை நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக குறைப்பு
அமீரகத்தின் புதிய சிவில் பரிவர்த்தனை சட்டமான Federal Decree-Law No. 25 of 2025-ன் கீழ், தனிநபர்கள் தங்களது சொத்துக்களை நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 15 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் புதிய குடிமைச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் ஒப்பந்த நடைமுறை மாற்றங்கள் தொடர்பான விவரங்களை அமீரக நீதிமன்றங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, தனிநபர்கள் தங்களது சொத்துக்களை நிர்வகிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18-இலிருந்து 15 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை அமீரகத்தில் ஒரு நபர் தனது சொந்த முடிவுகளை எடுக்கவும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் தகுதியான வயது வரம்பு 21 ஆக இருந்த நிலையில், புதிய சட்டத்தின்படி அது 18 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக புகைப்படம் எடுப்பவர்களுக்கு பரிசுத்தொகை
துபாயில் உள்ள “செம்மயிர்க்கொன்றை” (Flame Tree) மரங்களை மையமாகக் கொண்டு ஒரு புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் தற்போது பூத்துக் குலுங்கும் அழகிய செம்மயிர்க்கொன்றை மரங்களைச் சிறப்பாகப் புகைப்படம் எடுப்பவர்களுக்கு, அதிகபட்சமாக AED 15,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகைகள்:
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மூன்று நிலைகளில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முதல் பரிசு: AED 15,000
இரண்டாம் பரிசு: AED 10,000
மூன்றாம் பரிசு: AED 5,000
பங்கேற்பது எப்படி?
செம்மயிர்க்கொன்றை மரங்கள் (Flame Tree) தொடர்பான ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும்.
அந்தப் புகைப்படத்தை உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Public Account – பொதுக் கணக்காக இருக்க வேண்டும்) பதிவிட வேண்டும்.
பதிவிடும் போது #FlameTreeSeason என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் @dubaiculture, @hipaae மற்றும் @flametreeseason ஆகிய பக்கங்களைப் பின்தொடர வேண்டும்.
உங்களுடைய பதிவில் @dubaiculture, @hipaae மற்றும் @flametreeseason ஆகிய இன்ஸ்டாகிராம் பக்கங்களைக் குறிப்பிட்டு (Mention) அல்லது டேக் (Tag) செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு புகைப்படத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2026
துபாய் – சலாலா இடையே நேரடி விமான சேவை
துபாய் – சலாலா இடையே புதிய நேரடி விமான சேவையை ஓமான் ஏர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 3 வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
அமீரகத்தின் கடும் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சலாலா செல்ல விரும்பும் பயணிகளுக்காக, ஓமான் ஏர் நிறுவனம் ஜூலை 3 முதல் துபாய் – சலாலா இடையே வாரத்திற்கு 3 நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் கரீஃப் பருவமழையால், பாலைவன நகரமான சலாலா பசுமை நிறைந்த சுற்றுலா தளமாக மாறும்.
துபாயின் அசாதாரண சாதனைக்கு பெயர் ‘Dubai-it’
துபாய் ஆட்சியாளர், “Dubai It” என்ற புதிய வினைச்சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார். குறுகிய காலத்தில், உயர்தரத்துடன் அசாதாரண சாதனை நிகழ்த்துவதே அதன் பொருள்.
பாலைவனமாக இருந்த துபாய் இன்று உலகம் வியக்கும் நகரமாக உருவெடுத்திருப்பது இதற்கான எடுத்துக்காட்டாகும். துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ‘Dubai-it’ என்ற வார்த்தையை ஒரு வினைச்சொல்லாக வரையறுக்கிறார்.
அதாவது மிகக் குறுகிய காலத்தில், மிகச்சிறந்த தரத்துடன் ஒரு அசாதாரணமான சாதனையைச் செய்து முடிப்பதுதான் ‘Dubai-it’. “சொல்வதைச் செய்வோம், செய்வதையே சொல்வோம்” என்ற துபாயின் வேகமான வளர்ச்சி தத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
