🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

இந்தியா சென்ற அமீரக அதிபர்; கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள் என்னென்ன?

அரசுமுறை பயணமாக இந்தியா சென்ற அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்திய பிரதமர் திரு. மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் வகையில் புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. 

இந்தியா சென்ற அதிபர்: 

அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அரசுமுறை பயணமாக ஜன.19 அன்று இந்தியாவிற்கு சென்றார்.

உற்சாக வரவேற்பு:

அமீரக அதிபரை டெல்லி விமான நிலையத்தில் நேரில் சென்று ஆரத்தழுவி இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில், அமீரக அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டன.

இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளின் அடிப்படையில் தான் அதிபராக பொறுப்பேற்று 3வது முறையாக அமீரக அதிபர், இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக இந்தியா சென்றார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5-வது பயணம் ஆகும். 

இந்த பயணத்தின் போது துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வருகையின் போது அமீரகம் – இந்தியா இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

முக்கிய ஒப்பந்தங்களின் விவரம்:

பாதுகாப்புத் துறை: 

இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.

விண்வெளித் துறை: 

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், விண்வெளித் துறையை மேம்படுத்தவும் இரு நாட்டு விண்வெளி அமைப்புகளும் கைகோர்த்துள்ளன.

எரிசக்தி:

அமீரகத்தின் அட்னாக் (ADNOC) நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இடையே எரிவாயு விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. 

உணவுப் பாதுகாப்பு:

இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் முதலீடு:

குஜராத்தில் உள்ள ‘தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தை’ மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பு, அறிவியல், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையிலான நட்பு அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.