ஜூன் 21, 2026: அமீரகத்தின் மிக நீண்ட பகல் பொழுது கொண்ட நாள் மற்றும் அதிகாரப்பூர்வ கோடை தொடக்கம்!

ஜூன் 21 அன்று சூரிய கதிர்கள் கடக ரேகைக்கு நேரே விழுவதால், இது அமீரகத்தின் மிக நீண்ட பகல் கொண்ட நாளாகவும், கோடைக்காலத்தின் தொடக்கமாகவும் இருக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

கோடைகாலம் தொடக்கம் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் 21 அன்று சூரிய கதிர்கள் கடக ரேகைக்கு நேரே விழுவதால், அன்றைய தினம் ஆண்டின் மிக நீண்ட பகல் கொண்ட நாளாகவும், அதிகாரப்பூர்வ கோடைக்காலத்தின் தொடக்கமாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

 வானியல் ரீதியாக இந்நாள் “கோடைகால அயனமாற்றம்” (Summer Solstice) என்று அழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியில் ‘சால்’ (Sol) என்றால் சூரியன் என்றும், ‘சிஸ்டெர்’ (Sistere) என்றால் அப்படியே நிற்பது என்றும் பொருள்படும். 

பூமியின் அச்சு சூரியனை நோக்கி மிக அதிகமாக சாய்ந்திருக்கும் ஆண்டின் இரண்டு நாட்களை இது குறிக்கிறது. இந்த நாளில் பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி மிக அருகில் சாய்ந்திருப்பதால், அங்கு மிக நீண்ட பகல் பொழுதும், தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட இரவும் ஏற்படுகிறது.

வானிலை மாற்றம்

ஜூன் 21 அன்று, சூரியனின் கதிர்கள் கடக ரேகைக்கு (Tropic of Cancer – 23.37 டிகிரி வடக்கு) நேராக மேலே விழுகின்றன. இதனால் அமீரகத்தில் அன்றைய தினம் பகல் பொழுது மிக நீளமாக இருக்கும். இருப்பினும், இந்த நாளில் மட்டும் திடீரென வெப்பநிலை உச்சத்தை அடைந்துவிடாது. 

ஜூன் மாதத்தில் அமீரகத்தின் தினசரி வெப்பநிலை பொதுவாக 47°C முதல் 49°C வரை இருக்கும். சில நேரங்களில் இது 50°C ஐயும் தொடும்.

 மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் சராசரி வெப்பநிலை 2°C முதல் 3°C வரை உயர்கிறது என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. 

ஜூன் 21 அன்று சூரிய கதிர்வீச்சு உச்சத்தில் இருந்தாலும், பூமி அந்த வெப்பத்தை உறிஞ்சி மீண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிட குறிப்பிட்ட காலம் எடுக்கும். இதனால் வெப்பநிலை திடீரென உயராமல், வரும் நாட்களில் படிப்படியாகவே அதிகரிக்கும்.

அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக கோடைக்காலம் தொடங்குவதால், பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், போதிய அளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TAGGED: