அபுதாபியில் குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான வாடகை உயர்வுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் அறிவித்துள்ளது.
வாடகை உயர்விற்கு தற்காலிக தடை
- அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் ஜூன் 2 முதல் அமலுக்கு வரும் வகையில், நகரம் முழுவதும் வாடகை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
- குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறைக்கான தற்போதைய வாடகை ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது 0% உயர்வு மட்டுமே இருக்க வேண்டும். அதாவது வாடகையை உயர்த்தக் கூடாது.
- ஏற்கனவே வாடகைக்கு விடப்பட்ட ஒரு வீடோ அல்லது கடையோ காலியாகி, அதற்கு புதிய வாடகைதாரர் வந்தால், முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த அதே வாடகைத் தொகையையே நிர்ணயிக்க வேண்டும்.
பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு மத்தியில், வாடகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இதே போல், வாடகை உயர்த்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அபுதாபி உள்ள வாடகை விதிமுறைகள்
- சாதாரணமாக அபுதாபி சட்டப்படி, நில உரிமையாளர்கள் ஆண்டுக்கு 5% வரை வாடகையை உயர்த்தலாம். ஆனால், ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து வாடகைதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
- அபுதாபி நகராட்சி விதியின்படி, வாடகைதாரர்கள் தங்களின் ஆண்டு வாடகையில் 3% தொகையை வீட்டு வரியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
- வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்யவும், நில உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இருவரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ‘தவ்தீக்’ என்ற கட்டாய ஆன்லைன் பதிவு முறை அபுதாபியில் பயன்படுத்தப்படுகிறது.
- சந்தையின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தோராயமான வாடகை மதிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ளவும் 2024-ல் அபுதாபி ஒரு வாடகை குறியீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியது.
போர்ச் சூழலால் எடுக்கப்பட்ட பிற சமூக நல நடவடிக்கைகள்
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, மக்களின் பாதுகாப்பிற்காக அபுதாபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விமான ரத்து காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகளின் ஹோட்டல் தங்கும் காலத்தை நீட்டிக்கவும், அதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் அபுதாபி சுற்றுலாத்துறை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
துபாயும் (DET) இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஹோட்டல்களுக்கு உத்தரவிட்டது.
