மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்கு வரும் சர்வதேச நோயாளிகளின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையிலும், உலகளாவிய மருத்துவ சுற்றுலா தலமாக துபாயை முன்னிலைப்படுத்தும் வகையிலும் ஒரு புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA Dubai) மற்றும் துபாய் சுகாதார வாரியம் (DHA) ஆகிய இரு அமைப்புகள் இணைந்து துபாய்க்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் பயணிகளுக்கு ‘ஸ்மார்ட் மருத்துவ விசா’ சேவையை வழங்குவதற்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் மூலம் நோயாளிகள் துபாய்க்கு வருவதற்கு முன்பே விசா விண்ணப்பத்தில் தொடங்கி, அவர்களின் சிகிச்சை மற்றும் குணமடையும் காலம் வரை அனைத்து நடைமுறைகளும் ஒரே தளத்தின் கீழ் எளிமைப்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தில், GDRFA Dubai-வின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி மற்றும் DHA-வின் தலைமை இயக்குநர் டாக்டர் அலவி ஷேக் அலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
GDRFA துபாயின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி கூறுகையில், “இந்த கூட்டு முயற்சியானது, குடியுரிமை மற்றும் சுகாதார சேவைகளை இணைத்து மிகவும் நெகிழ்வான, தடையற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கும். இது மருத்துவ சுற்றுலாவில் துபாயின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும்” என்றார்.
துபாய் சுகாதார வாரியத்தின் (DHA) இயக்குநர் ஜெனரல் டாக்டர் அலவி ஷேக் அலி குறிப்பிடுகையில், “மருத்துவ சுற்றுலா என்பது வெறும் சிகிச்சை மட்டுமல்ல, நோயாளிகள் எளிதாக வந்து செல்வது, தரமான கவனிப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த அனுபவத்தையும் உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் நோயாளிகளுக்கு ஒரு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்தார்.
யார் தகுதியுடையவர்கள்
துபாயில் மருத்துவ சுற்றுலா விசாக்கள் 90 அல்லது 180 நாட்கள் காலத்திற்கு, ஒற்றை நுழைவு மற்றும் பலமுறை நுழைவு வசதிகளுடன் வழங்கப்படுகின்றன. நீண்டகால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், தேவைக்கேற்ப இந்த விசாக்களை புதுப்பித்துக்கொள்ளவும் முடியும்.
இந்த விசாவைப் பெற, நோயாளிகள் அமீரகத்தில் உரிமம் பெற்ற சுகாதார நிலையம் ஒன்றால் பரிந்துரைக்கப்பட வேண்டும். அந்த சுகாதார நிலையமே விசா விண்ணப்ப செயல்முறைகளை மேற்கொள்வதுடன், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவை வழங்குநர்கள் மூலமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், சிகிச்சை மற்றும் குணமடைதல் காலத்தில் நோயாளிகளுடன் இருந்து உதவுபவர்களுக்காக துணைவர் விசாக்களும் வழங்கப்படுகின்றன.
