கோடைகால வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, மதிய நேரத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக MOHRE அறிவித்துள்ளது.
அமீரகத்தில் கோடைகாலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மதிய நேர வெளிப்புற வேலைத் தடை (Midday Break) இந்த ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மனிதவள மற்றும் பொதுத்துறை அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தினசரி மதியம் 12:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை தொழிலாளர்களை நேரடி சூரிய வெளிச்சத்திலோ அல்லது திறந்தவெளிகளிலோ வேலைக்கு அமர்த்த கூடாது. கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அலை பாதிப்புகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளில் இருந்தும் அவர்களை காக்கிறது.
இந்தத் தடை காலத்தில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு போதுமான நிழற்குடைகள் அல்லது குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேலை செய்யும் இடங்களில் காற்றோட்டத்திற்கான மின்விசிறிகள், தடையற்ற குடிநீர் வசதி மற்றும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும் எலக்ட்ரோலைட்டுகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பணிகள்
சில தொழில்நுட்ப மற்றும் அத்தியாவசியக் காரணங்களால் தள்ளிப்போட முடியாத குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் தார் போடுதல், கான்கிரீட் கலவைகளை ஊற்றுதல் போன்ற நிறுத்த முடியாத கட்டுமான பணிகள் மற்றும் மின்சாரம், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை, போக்குவரத்து போன்ற பொதுச்சேவைகளில் ஏற்படும் அவசர கால பழுதுபார்ப்பு வேலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கு பெற்ற வேலைகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும், நிறுவனங்கள் அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
AED 50,000 வரை அபராதம்
இந்த மதிய நேர வேலை தடை உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என MoHRE எச்சரித்துள்ளது. விதியை மீறி மதிய நேரத்தில் வேலைக்கு அமர்த்தப்படும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா AED 5,000 வீதம், ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக AED 50,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளில் அமீரகத்தில் உள்ள 99% நிறுவனங்கள் இந்த விதியை சரியாக பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
