அஜ்மானில் வேலை நேரம் குறைப்பு
அஜ்மான் அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சோர்வாக உள்ள கர்ப்பிணிகளின் தினசரி பணி நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அஜ்மான் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமியின் உத்தரவின்படி, அஜ்மான் அரசில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், சோர்வாக உள்ள கர்ப்பிணி ஊழியர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் ஊழியர்களின் தினசரி பணி நேரம் குறைக்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
புதிய ஸ்மார்ட் மருத்துவ விசா
வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக துபாய் வரும் நோயாளிகளுக்காக ‘ஸ்மார்ட் மருத்துவ விசா’ சேவையை அறிமுகப்படுத்த துபாய் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக துபாய் வருபவர்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் எளிமையான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், ‘ஸ்மார்ட் மருத்துவ விசா‘ சேவையை அறிமுகப்படுத்த துபாய் திட்டமிட்டுள்ளது.
இதற்காக துபாய் சுகாதார ஆணையமும், அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகமும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
1-ஆம் தேதியே சம்பளம் வழங்கிய நிறுவனங்கள்
புதிய சம்பளச் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜூன் 1-ஆம் தேதியே அல் அன்சாரி எக்ஸ்சேஞ்சின் WPS தளம் மூலம் சம்பளம் வழங்கிய நிறுவனங்களின் எண்ணிக்கை 151%-க்கும் மேல் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
மாதந்தோறும் 1-ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும் என்ற புதிய காலக்கெடு காரணமாக, ஜூன் 1 அன்று மட்டும் ‘அல் அன்சாரி எக்ஸ்சேஞ்ச்’ நிறுவனத்தின் ‘ஊதிய பாதுகாப்பு அமைப்பு’ (WPS) தளம் வழியாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கிய நிறுவனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட 151%-க்கும் மேல் அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி புத்தாண்டு விடுமுறை
ஹிஜ்ரி புத்தாண்டு 1448-ஐ முன்னிட்டு, அமீரகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 16 அன்று வழக்கமான முறையில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படும் என Federal Authority for Government Human Resources தெரிவித்துள்ளது.
அதே போல் ஜூன் 15ஆம் தேதி அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை வழங்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுக்கான கூட்டாட்சி ஆணையமும் (FAHR), மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகமும் (MoHRE) அறிவித்துள்ளன.
இதன் மூலம் வார இறுதி விடுமுறை நாட்களான ஜூன் 13 மற்றும் 14 ஆகியவற்றுடன் சேர்த்து, ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
உறுதிமொழி எடுப்பவர்களுக்கு அமீரகத்தின் பாராட்டுச் சான்றிதழ்
அமீரக அதிபரின் சிறந்த தலைமையைப் பாராட்டி, அவருக்கு அமீரக குடிமக்களும், குடியிருப்பாளர்களும் தங்களின் விசுவாசத்தை உறுதிமொழியாக வெளிப்படுத்தும், The Pledge and Commitment முயற்சியில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அமீரகத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு வித்திட்ட அதிபரின் சிறந்த தலைமையைப் பாராட்டி, அவருக்கு அமீரக குடிமக்களும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் தங்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
இந்த உறுதிமொழியில் ஆன்லைன் மூலம் தங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கி கையெழுத்திடுபவர்களுக்கு, அதற்கான டிஜிட்டல் பாராட்டுச் சான்றிதழ் (Digital certificate of appreciation) வழங்கப்படுகிறது.
மதிய நேரத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய தடை
கோடைகால வெப்பத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை தினமும் மதியம் 12:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை மதிய நேரத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக MoHRE அறிவித்துள்ளது.
இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளருக்கு AED 5,000 வீதம், அதிகபட்சமாக AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அமீரக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.
