10 நிமிடத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள் முதல் பாஸ்போர்ட் சேவை ஒப்பந்தம் ரத்து வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

துபாயில் குண்டுவெடிப்புகள் நிகழவில்லை

டவுன்டவுன் துபாயில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக Reuters நிறுவனம் வெளியிட்ட செய்தி முற்றிலும்  தவறானது என துபாய் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக துபாய் அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள X-தள பதிவில், “டவுன்டவுன் துபாயில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக Reuters நிறுவனம் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது. இது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வதந்திகளையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். துல்லியமான தகவல்களுக்கு அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும்”  என்று குறிப்பிட்டுள்ளது. 

SOS சேவை மூலம்  10 நிமிடத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள்

துபாயில் பட்டப்பகலில் ஒரு பணப் பரிமாற்ற (Currency Exchange) அலுவலகத்தில், மூவர்  AED 10 மில்லியனை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது ஊழியர் ஒருவர்  SOS அவசர சேவையை இயக்கியதைத் தொடர்ந்து, வெறும் 10 நிமிடங்களில் கொள்ளையர்களை காவல்துறை கைது செய்து, பணத்தையும் மீட்டது.

முகமூடி அணிந்த மூன்று ஆப்பிரிக்கக் கொள்ளையர்கள் அந்த அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, கயிற்றால் கட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை உடைத்துவிட்டு, AED 10 மில்லியன் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

கொள்ளையர்கள் தப்பியவுடன், ஒரு ஊழியர் தனது கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு, தன் மொபைல் போனில் இருந்த துபாய் காவல்துறையின் ‘SOS’ அவசரச் சேவையைப் பயன்படுத்திக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பினார்.

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே துபாய் காவல்துறையினர் தேரா பகுதியின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் மூடினர். அடுத்த 10 நிமிடங்களில், 3 கொள்ளையர்களையும் பிடித்து அவர்களிடமிருந்து பணத்தை கைப்பற்றினர். 

அல்ஹிந்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் சேவை ஒப்பந்தம் ரத்து  

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகளை அளிக்க அல்ஹிந்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட  டெண்டரை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம், புதிய டெண்டர் விடப்படும் வரை, இதற்கு முன்பு இச்சேவையை வழங்கிய நிறுவனங்களே சேவையைத் தொடர அனுமதி அளித்துள்ளது.

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Attestation) சேவைகளை நடத்துவதற்கான ஒப்பந்தம் ‘அல்ஹிந்த் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்த செயல்முறையின் “தொழில்நுட்ப மதிப்பீட்டை” (Technical Evaluation) டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது.

புதிய டெண்டர் அறிவிக்கும் வரை தற்போது இந்தச் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களே தொடர்ந்து சேவைகளை வழங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு இந்தச் சேவைகளை வழங்கி வந்த BLS International மற்றும் ‘SGIVS Global Services ஆகிய நிறுவனங்கள் மீண்டும் தற்காலிகமாக இந்தச் சேவைகளை வழங்க வாய்ப்புள்ளது.

EMI-யில் விமான டிக்கெட் வழங்கும் எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்யும் இந்திய பயணிகளுக்காக, விமான டிக்கெட் கட்டணத்தை 3 முதல் 36 மாதங்கள் வரை EMI முறையில் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, SBI, HDFC வங்கி, ICICI வங்கி, Axis வங்கி உள்ளிட்ட இந்தியாவின் 12 முன்னணி வங்கிகளுடன் எமிரேட்ஸ் கூட்டணி அமைத்துள்ளது. தகுதியான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயணிகள் இந்த EMI வசதியைப் பெறலாம்.

இந்த வசதி, எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான emirates.com மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கிடைக்கும்.

காரில் Emergency Light பொருத்தியதால்   இருவருக்கு 6 மாதம் சிறை

அபுதாபியில் காரை சட்டவிரோதமாக Emergency Light உடன் ஓட்டிய நபருக்கும், அந்த Emergency Light-ஐ பொருத்திக் கொடுத்த நபருக்கும் அபுதாபி நீதிமன்றம் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஓட்டுநருக்கு AED 100,000 அபராதம் விதித்ததுடன், காரை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

TAGGED: