Al Quoz-ல் Bus On Demand சேவை தொடக்கம்.. 2 வாரங்கள் இலவச பயணம்!

துபாயின் Al Quoz பகுதியில் இனி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வது முன்னெப்போதையும் விட எளிதாக போகிறது.

துபாயின் முக்கிய தொழில் மற்றும் வணிக மையங்களில் ஒன்றான Al Quoz பகுதியில், பொதுமக்களின் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் Bus On Demand சேவை வரும் ஜூலை 20 முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. 

இந்த சேவை, Al Quoz பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வசதியாகவும் விரைவாகவும் பயணிக்க உதவும். 

மேலும், இந்த புதிய சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், ஜூலை 20 முதல் இரண்டு வாரங்களுக்கு Bus On Demand சேவையில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bus On Demand என்றால் என்ன? 

Bus On Demand என்பது வழக்கமான பேருந்துகளைப் போல நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படாமல், பயணிகளின் தேவைக்கு ஏற்ப செயல்படும் நவீன பொதுப் போக்குவரத்து சேவையாகும். இந்தச் சேவை செயல்படும் பகுதிக்குள், பயணிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே பேருந்தை வரவழைத்து, விரும்பிய இலக்கை எளிதாகவும் வசதியாகவும் சென்றடையலாம்.

மேலும், மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் இருந்து வீடு அல்லது அலுவலகம் வரை தடையற்ற First & Last Mile இணைப்பை வழங்குவதன் மூலம், இந்தச் சேவை பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கிறது. அதேசமயம், குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்துகள், வசதியான இருக்கைகள் மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

பயன்படுத்துவது எப்படி? 

  • உங்கள் ஸ்மார்ட்போனில் ‘Bus On Demand’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 
  • கணக்கைத் தொடங்கி, நீங்கள் இருக்கும் இடம் (Pickup point) மற்றும் செல்ல வேண்டிய இடத்தை (Drop-off point) தேர்வு செய்யவும்.
  • உங்களுக்கான பேருந்து மற்றும் அது வரும் நேரம் செயலியில் காண்பிக்கப்படும்.
  • செயலியில் காட்டப்படும் வரைபடத்தின் உதவியுடன் உங்களது பேருந்து எங்கு வருகிறது என்பதை Live tTracking செய்யலாம்.