குறைந்த வருமானம் கொண்ட 2,339 எமிராட்டி ஓய்வூதியதாரர்களின் கடன்களுக்கான AED 834 மில்லியனுக்கும் அதிகமான வட்டியை தள்ளுபடி செய்ய அமீரக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், துணை அதிபர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தொடர் நடவடிக்கைகளின் பேரிலும், அமீரகத்தில் குறைந்த வருமானம் கொண்ட 2,339 எமிராட்டி ஓய்வூதியதாரர்களின் கடன்களுக்கான AED 834 மில்லியனுக்கும் அதிகமான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு பங்களித்த மற்றும் ஆதரவளித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமக்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும், அமீரகத்தில் குடும்ப மற்றும் சமூக நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் இந்த நிறுவனங்கள் வழங்கிய ஆதரவு பாராட்டப்பட்டுள்ளது.
அமீரகத்தின் குடும்ப ஆண்டு 2026
குறைந்த வருமானம் கொண்ட, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமீரக ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் நிதி நிலையை நிலைப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. மேலும், இது ‘குடும்ப ஆண்டு 2026’-ன் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது.
பங்களித்த வங்கிகள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட வட்டித் தொகைகளின் விவரம்
- ADCB குரூப்: AED 655 மில்லியன்
- ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி (FAB): AED 150 மில்லியன்
- அபுதாபி இஸ்லாமிக் வங்கி (ADIB): AED 18.5 மில்லியன்
- எமிரேட்ஸ் NBD குரூப் மற்றும் எமிரேட்ஸ் இஸ்லாமிக்: AED 6.7 மில்லியன்
- துபாய் இஸ்லாமிக் வங்கி: AED 2.3 மில்லியன்
- கொமர்ஷியல் பேங்க் ஆஃப் துபாய் (CBD): AED 792,000
- ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி: AED 716,000
- நேஷனல் பேங்க் ஆஃப் ராஸ் அல் கைமா (RAKBANK): AED 566,000
இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய எதிர்கால வட்டி மற்றும் லாபப் பங்கீட்டு தொகைகளை முழுமையாக தள்ளுபடி செய்யும். அதே நேரத்தில், கடன் பெற்ற பயனாளிகள் தங்களுக்கான எளிய தவணை முறைகளின் கீழ் அசலை மட்டும் தொடர்ந்து திருப்பிச் செலுத்துவார்கள்.
