அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE), தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியப் பாதுகாப்பு அமைப்பு (WPS) விதிகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
அமீரகத்தின் முந்தைய சம்பள விதிமுறையின்படி (Resolution 598 of 2022), ஊழியர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சம்பளத தேதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இதனால் நிறுவனங்கள் மாத இறுதியிலோ அல்லது மாதத்தின் பாதியிலோ சம்பளத்தை வழங்க முடிந்தது. மேலும், நிறுவனங்களுக்கு 15 நாட்கள் சலுகைக்காலமும் வழங்கப்பட்டதால், அந்த நாட்களுக்குள் ஏற்படும் சம்பள தாமதம் உடனடியாக விதிமீறலாக கருதப்படவில்லை.
ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசாணைப்படி (Resolution No. 340 of 2026), இந்த 15 நாட்கள் சலுகைக்காலம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அனைத்து தனியார் நிறுவனங்களும் ஒவ்வொரு மாதத்தின் 1ஆம் தேதியன்றே கண்டிப்பாகச் சம்பளத்தை வழங்கிட வேண்டும் என்ற ஒரே பொதுவான காலக்கெடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் கண்காணிப்பு விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான சம்பளத்தை சம்பள பாதுகாப்பு அமைப்பு (WPS) அல்லது அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அதற்கான முறையான ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
85% ஊதிய விதி
இந்த புதிய விதியின்படி, நிறுவனங்கள் சட்டத்தை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்டறிய இரண்டு நிலைகளில் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஒரு நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் குறைந்தது 85% பேருக்கு 1ஆம் தேதியே முழு சம்பளத்தை வழங்க வேண்டும். இரண்டாவதாக, அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் சம்பளத்தின் குறைந்தது 85% தொகையையாவது அந்த தேதிக்குள் வழங்கியிருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த 85 சதவீத விதிமுறை என்பது நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம் என்பதைக் குறிக்காது. ஊழியர்களுக்கு தங்களுக்கு வர வேண்டிய மீதிச் சம்பளத்தை முழுமையாகக் கோருவதற்கும், சட்டப்படி பெறுவதற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன. அரசாங்கம் நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கு கொண்டு வந்துள்ள ஒரு தற்காலிக அளவுகோலே தவிர, இது ஊழியர்களின் சம்பளத்திற்கான இறுதி அளவுகோல் கிடையாது.
சம்பளம் தாமதமானால் என்ன நடவடிக்கை?
2ஆம் நாள்: சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு அமைச்சகத்திடமிருந்து எச்சரிக்கை அனுப்பப்படும்.
5ஆம் நாள்: அந்நிறுவனத்திற்கு New Work Permits வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும். முதலாளிக்கு இதுகுறித்த இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்படும்.
11ஆம் நாள்: நிறுவனத்திற்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
16ஆம் நாள்: பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சார்பில் அரசாங்கமே நேரடியாக தனிநபர் அல்லது கூட்டுத் தொழிலாளர் விவாதப் புகாரைப் (Labour Dispute) பதிவு செய்யும். 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு அல்லது ஒரே முதலாளியின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் மொத்தம் 25 ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் இந்த விதிமுறை பொருந்தும்.
21ஆம் நாள்: சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் அல்லது 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் கூட்டு விவாத நடவடிக்கைகள் தொடங்கும். நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படலாம் மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாளருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படலாம்.
யாருக்கு இந்த விதிமுறை பொருந்தாது?
- நிறுவனத்தை விட்டு முறையாக வெளியேறவில்லை என புகார் அளிக்கப்பட்ட ஊழியர்கள்.
- நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஊழியர்கள்.
- Unpaid leave-ல் இருக்கும் ஊழியர்கள்.
- கப்பலில் வேலை பார்க்கும் ஊழியர்கள்.
- வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து அமீரகத்திற்கு வெளியே சம்பளம் வாங்கும் ஊழியர்கள்.
- மூன்று மாதம் Short-Term Permits-ல் உள்ள ஊழியர்கள்.
- வங்கிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற சில துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்.
