ஒரு சில தவறுகள் உங்கள் வேலை, ஓட்டுநர் உரிமம், ஏன் எதிர்காலத்தையே கூட பாதிக்கலாம். அதில் பிரபலமான ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது. பலரும் இன்னும் அதன் விளைவுகளை முழுமையாக உணராமல் இருக்கிறார்கள்.
அமீரகத்தில் வாகனம் ஓட்டும்போது மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. 2025 மார்ச் 29 முதல் அமலுக்கு வந்த Federal Decree-Law No.14 of 2024-ன் கீழ், விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக AED 2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை, ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுவருந்தி வாகனம் ஓட்டினால் என்ன தண்டனை?
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நிரூபிக்கப்பட்டால், AED 20,000 முதல் AED 100,000 வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஓட்டுனர் உரிமம் பொறுத்தவரை முதல் முறை என்றால் குறைந்தபட்சம் 3 மாதங்கள் உரிமம் இடைநீக்கம் இரண்டாவது முறை என்றால் 6 மாதங்கள் இடைநீக்கம், மூன்றாவது முறையும் தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமம் முழுமையாக ரத்தாகும்.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டினால்?
மது மட்டுமல்ல, நார்கோட்டிக் அல்லது மனநிலையை பாதிக்கும் (Psychotropic) போதைப்பொருட்கள் பயன்படுத்தி வாகனம் ஓட்டினாலும் கடுமையான தண்டனை காத்திருக்கும்.
AED 30,000 முதல் AED 200,000 வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்.
மேலும், ஓட்டுனர் உரிமம் முதல் முறை என்றால் 6 மாதங்களுக்கும்,
இரண்டாவது முறை 1 ஆண்டு இடைநீக்கம் செய்யப்படும், குற்றம்
மூன்றாவது முறையும் தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் மீண்டும் வாகனம் ஓட்டினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது AED 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வாகம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் தண்டனை இன்னும் கடுமையாகும்.
குடிபோதையிலோ அல்லது போதைப்பொருள் தாக்கத்திலோ வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழந்தால் குறைந்தபட்சம் AED 100,000 அபராதம் அல்லது குறைந்தபட்சம் 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சாலை பாதுகாப்புக்கு முக்கிய எச்சரிக்கை
அமீரகத்தின் புதிய போக்குவரத்து சட்டம், “Drunk and Drive” மற்றும் “Drug Driving” ஆகியவற்றுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance) கொள்கையை வலியுறுத்துகிறது. குடிபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது, அபராதம் மட்டுமல்லாமல், உங்கள் ஓட்டுநர் உரிமையையும், சுதந்திரத்தையும், மற்றவர்களின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தும் என்பதை அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.
