அடுத்த 25 ஆண்டுகளுக்கு வசந்த மற்றும் குளிர் காலத்தில் மட்டுமே ஹஜ் யாத்திரை!

இனிவரும் ஆண்டுகளில் ஹஜ் யாத்திரைக்கான வானிலை மிகவும் இதமாக மாறப்போகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டுடன் கோடைக் காலத்தில் நடைபெறும் ஹஜ் யாத்திரை நிறைவடைந்தது. இந்த ஆண்டு (2026) வசந்த காலத்தின் இறுதி நாட்களில் ஹஜ் தொடங்குகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஹஜ் யாத்திரை கடுமையான கோடைக் காலத்தில் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன?

இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் (ஹிஜ்ரி) அமைப்பால் நடக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஒரு ஆண்டிற்கு 354 நாட்கள் மட்டுமே இருக்கும். இது ஆங்கில நாட்காட்டியை (Gregorian) விட 11 நாட்கள் குறைவு. 

இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் தேதி 11 நாட்கள் முன்னோக்கி நகர்ந்து, அனைத்து பருவ காலங்களிலும் மாறி மாறி வரும். ஹஜ் யாத்திரை மீண்டும் அதே பருவ காலத்திற்கு வர 32 முதல் 33 ஆண்டுகள் ஆகும்.

கடந்த 2018 முதல் 2025 வரை ஹஜ் யாத்திரை மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற கடுமையான கோடை மாதங்களில் வந்ததால், ஹஜ் பயணிகள் கடும் வெப்பத்தை சந்திக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த 25 ஆண்டுகளுக்குக் குளுமையான வானிலை

அமீரக வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் அவர்களின் கணிப்புப்படி, இனிவரும் ஆண்டுகளில் ஹஜ் பயணம் குளிர்காலத்தை நோக்கி நகரப்போகிறது:

  • 2029 இல்  ஹஜ் பயணம் ஏப்ரல் மாதத்தில் (வசந்த காலம்) வரும்.
  • 2034 முதல் 2040 வரை  ஹஜ் பயணம் பிப்ரவரி போன்ற முழுமையான குளிர்காலத்தில் வரும். சில நேரங்களில் மழையையும் எதிர்பார்க்கலாம்.
  • மீண்டும் ஹஜ் பயணம் கடுமையான வெயில் காலத்திற்குத் திரும்ப 33 ஆண்டுகள் ஆகும் (அதாவது 2050-க்கு மேல்).

இதனால் பயணிகளுக்கு என்ன நன்மை?

  • உடல்நலம்: கடுமையான வெயில் இல்லாததால், வெப்பத்தாக்கம் (Heatstroke) மற்றும் மயக்கம் போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்படும் ஆபத்து குறையும்.
  • முதியவர்களுக்கு வசதி: வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் சிரமமின்றி தங்களின் கடமைகளைச் செய்ய முடியும்.
  • சுலபமான பயணம்: மினா, அராஃபத், முஸ்தலிஃபா போன்ற புனித இடங்களுக்கு இடையே மக்கள் எளிதாகவும் நிம்மதியாகவும் நடந்து செல்ல முடியும்.
  • சிறந்த சேவை: மருத்துவமனை மற்றும் இதர நிர்வாக அமைப்புகளுக்கான பணிச்சுமையும் அழுத்தமும் குறையும்.

TAGGED: