ஈத் கொண்டாட்டம் முதல் கம்ப்யூட்டர் கீ போர்ட்களில் திர்ஹாம் சின்னம் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்

எமிராட்டி ஓய்வூதியதாரர்களின் கடனுக்கான வட்டி தள்ளுபடி 

குறைந்த வருமானம் கொண்ட 2,339 எமிராட்டி ஓய்வூதியதாரர்களின் கடன்களுக்கான AED 834 மில்லியனுக்கும் அதிகமான வட்டியை தள்ளுபடி செய்ய அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்.

அமீரக அதிபரின் வழிகாட்டுதலின்படியும், துபாய் ஆட்சியாளரின் தொடர் நடவடிக்கைகளின் பேரிலும், அமீரகத்தில் குறைந்த வருமானம் கொண்ட 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 2,339 எமிராட்டி ஓய்வூதியதாரர்களின் கடன்களுக்கான AED 834 மில்லியனுக்கும் அதிகமான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்களோடு மக்களாக ஈத் தொழுகையில் ஈடுபட்ட அதிபர் 

அமீரகத்தில் ஈத் அல்-அதா திருநாள் மே.27 அன்று கொண்டாடப்பட்டது.  அன்று அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற ஷேக் சையத் கிராண்ட் மசூதியில் மக்களோடு மக்களாக  ஈத் அல்-அதா சிறப்புத் தொழுகையை மேற்கொண்டார்.

அவருடன் துணை அதிபர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஏராளமான குடிமக்கள், குடியிருப்பாளர்கள் இணைந்து தொழுகை நடத்தினர்.

AED என டைப் செய்ய வேண்டியதில்லை;  Keyboard-களில் திர்ஹாம் சின்னம் 

டாலர் ($), ரூபாய் (₹) போல, அமீரக திர்ஹாம் சின்னமும் விரைவில் தொலைபேசி மற்றும் கணினி கீபோர்டுகளில் இடம்பெற உள்ளது. இதற்கான பரிசீலனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான இறுதி முடிவு செப்டம்பரில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய டிஜிட்டல் எழுத்துக்களைத் தரப்படுத்தும் ‘யூனிகோட்’ அமைப்பின் புதிய 18.0 பீட்டா பதிப்பில் திர்ஹாம் சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது. சின்னத்திற்கு யூனிகோட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டால், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் அதை தங்களது கீபோர்டுகளிலும், சாஃப்ட்வேர்களிலும் சேர்த்துக் கொள்ள முடியும். 

Number 6 பட்டனில் சின்னத்தை சேர்க்க அமீரக மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. அதன் பிறகு, எதிர்காலத்தில் மக்கள் “AED” என்று டைப் செய்வதற்குப் பதிலாக, ஒரே ஒரு தட்டலில் (tap) திர்ஹாம் சின்னத்தை டைப் செய்துவிடலாம். இதற்கான இறுதி முடிவை யூனிகோட் அமைப்பு செப்டம்பர் 2026-இல் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குவைத் மீதான ஈரானின் அமீரகம் கண்டனம்

மே 28 அன்று காலை குவைத் மீது ஈரான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமீரக வெளியுறவு அமைச்சகம் (MoFA) வெளியிட்டுள்ள அறிக்கையில், “குவைத் மீது ஈரான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், குவைத்தின் இறையாண்மையை முற்றிலும் மீறும் செயலாகும். குவைத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்குகிறோம்” என குறிப்பிட்டுள்ளது. 

தொழிலாளர்களுக்காக நடைபெற்ற ஈத் கொண்டாட்ட நிகழ்ச்சி 

அமீரகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட ஈத் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில், விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு, தொழிலாளர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்கள், மொபைல் போன்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அமீரகம் முழுவதும் 30 இடங்களில் தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட ஈத் பண்டிகை நிகழ்ச்சிகளில்  விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குலுக்கல் போட்டிகள் மூலம் தொழிலாளர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்கள் மற்றும் மொபைல் போன்கள் பரிசாக வழங்கப்பட்டன. அமீரக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன்  அமைச்சகம் (MoHRE), உள்துறை அமைச்சகம், காவல்துறை, நகராட்சிகள் மற்றும் பிற அரசு அமைப்புகளுடன் இணைந்து ‘நம் தொழிலாளர்களின் மகிழ்ச்சி, நம் ஈத் பண்டிகையின் மகிழ்ச்சி’ (Our Workers’ Happiness, the Joy of Our Eid) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வை நடத்தியது.

TAGGED: