1.7 மில்லியனுக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் தங்களது மதக் கடமைகளை பாதுகாப்பாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் நிறைவேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹஜ் பருவம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் காரணமாக, எவ்வித பெரிய இடையூறும் இன்றி பயணிகள் தங்களது கடமைகளை நிறைவு செய்வதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
மக்கா பிராந்தியத்தின் துணை ஆளுநரும், நிரந்தர ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் துணைத் தலைவருமான இளவரசர் சவூத் பின் மிஷால் பின் அப்துல்அஜீஸ், இந்த ஆண்டின் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தாக அறிவித்தார். பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மத கடமைகளுக்கு துணையாக இருந்ததாகவும், இதன் மூலம் பயணிகள் தங்களின் கடமைகளை எவ்வித சிரமமுமின்றி, மனநிறைவோடு நிறைவேற்ற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அராஃபத் மைதானத்தில் கூடுதல், முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல் மற்றும் மினாவில் சாத்தானுக்கு கல்லடிக்கும் சடங்கு உள்ளிட்ட ஹஜ்ஜின் முக்கிய கடமைகளை பயணிகள் முடிந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹஜ் வெற்றி ஒரு முடிவு அல்ல, புதிய தொடக்கம்
இறைவனின் விருந்தினர்களாக வருகை தரும் மக்களுக்குச் சேவை செய்வதிலும், அவர்கள் பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் சூழலில் தங்களது மதக் கடமைகளைச் செய்வதை உறுதி செய்வதிலும் சவூதி அரேபியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த ஹஜ் பயணம் பிரதிபலிக்கிறது என்று இளவரசர் சவூத் கூறினார்.
மேலும், இந்த ஹஜ்ஜின் வெற்றி என்பது இத்துடன் முடிவடைந்துவிடும் உழைப்பல்ல, மாறாக இது எதிர்கால ஹஜ் பருவத்திற்கான தொடக்கமே ஆகும் என்றும், பயணிகளுக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் சேவை செய்யும் முதன்மை நாடாக சவூதி அரேபியாவின் நிலையை தக்கவைத்துக கொள்ள சவூதி அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அவர் அவர் தெரிவித்தார்.
