அபுதாபியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகமது பின் சயீத் சிட்டி பயணிகள் ரயில் நிலையத்தை அபுதாபி இளவரசர் ஷேக் காலித் அவர்கள் ஜூன் 23ஆம் தேதி திறந்து வைத்தார்.
அமீரகத்தின் முதல் பயணிகள் ரயில் திட்டமான எதிஹாட் ரயில் அமைப்பின் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தற்போது நிறைவடைந்துள்ள அபுதாபி – புஜைரா இடையேயான பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 45 நிமிடங்களாக குறையும்.
அபுதாபி ரயில் நிலையத்தை இளவரசர் திறந்து வைத்தார்
இத்திட்டத்தின் ஒரு மைல்கல்லாக, அபுதாபியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகமது பின் சயீத் சிட்டி பயணிகள் ரயில் நிலையத்தை அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஜூன் 23ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அபுதாபி இளவரசர் ஷேக் காலித் அவர்கள், “இந்த பயணிகள் ரயில் திட்டம் என்பது அமீரகத்தின் ஒருங்கிணைந்த போக்குவரத்து தொலைநோக்கு பார்வையின் பிரதிபலிப்பாகும். இது எமிரேட்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிலையான பொருளாதாரம், முதலீடு, சுற்றுலா மற்றும் நகர வளர்ச்சிக்கான புதிய கதவுகளையும் திறந்து வைக்கும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிஹாட் ரயில் நிறுவனத்தின் தலைவரான மாண்புமிகு ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பேசுகையில், “இந்த தேசிய போக்குவரத்து அமைப்பில் பயணிகள் ரயில் சேவை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, பாதுகாப்பான மற்றும் மிகவும் திறமையான பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்” என்றார்.
அமீரகத்தின் இந்த பிரம்மாண்ட திட்டமானது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமன்றி, நாட்டின் முக்கிய நகரங்கள், பொருளாதார மையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை ஒன்றிணைக்கும் ஒரு பலமான பொருளாதாரப் பாலமாக அமையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
