பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை உயர்த்தியது இந்திய அரசு!

ஜூலை 1, 2026 முதல் இந்திய பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரூ. 1500 வரை உயர்த்துவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்திய அரசு பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு (2012-ல்) இந்த கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்போர்ட் கட்டணங்கள்

36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:

சாதாரண முறை (Normal): ₹1,500-லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் முறை (Tatkaal): ₹3,500-லிருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்: 

சாதாரண முறை: ₹2,000-லிருந்து ₹3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் முறை: ₹4,000-லிருந்து ₹6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட் (மாற்று பாஸ்போர்ட்)

36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:

சாதாரண முறை:  ₹3,000-லிருந்து ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் முறை: ₹5,000-லிருந்து ₹7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:

சாதாரண முறை;  ₹3,500-லிருந்து ₹6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் முறை: ₹5,500-லிருந்து ₹8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கான  பாஸ்போர்ட் கட்டணங்கள்

புதிய / புதுப்பித்தல் பாஸ்போர்ட் (36 பக்கங்கள்):

சாதாரண முறை;  ₹1,000-லிருந்து ₹1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தட்கல் முறை:  ₹3,000-லிருந்து ₹4,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதர சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்கள்

காவல்துறை சான்றிதழ் (Police Clearance Certificate – PCC), பாஸ்போர்ட் ஒப்படைப்புச் சான்றிதழ் (Surrender Certificate), குளோபல் என்ட்ரி புரோகிராம் (GEP) சரிபார்ப்பு அல்லது பாஸ்போர்ட் சார்ந்த பிற சான்றிதழ்களுக்கான கட்டணம் ₹750 (சாதாரண திட்டத்தின் கீழ்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

கட்டணச் சலுகை 

முதன்முறையாக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் (Fresh Application) 8 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும். (இந்த சலுகை பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு – Reissue – பொருந்தாது).