அமீரகத்தை நோக்கி வந்த ஆளில்லா விமானம்
ஆகஸ்ட் 31 அன்று ஈரானிலிருந்து அமீரக கடற்பகுதியை நோக்கி வந்த ஆளில்லா விமானத்தை அமீரக விமானப்படை தடுத்து அழித்துள்ளது. 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமீரக வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
விசா சேவைகளை செய்து தருவதாகக் கூறி மோசடி செய்யும் போலி முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், பாஸ்போர்ட், Emirates ID உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பகிரக் கூடாது என எச்சரித்துள்ளது.
அமீரகத்தில் குறிப்பாகக் குறைந்த வருவாய் பெறும் தொழிலாளர்களைக் குறிவைத்து சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். விசா முறையாக்கம், அவசரச் சான்றிதழ், எக்சிட் பெர்மிட் (Outpass), எமிரேட்ஸ் ஐடி அல்லது வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சேவைகளை வழங்கும் எந்தவொரு நபரின்/முகவரின் தகுதியைச் சரிபார்த்து செயல்படுமாறும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை உடனடியாகத் தூதரகத்திற்கும் அமீரக அதிகாரிகளுக்கும் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஈராக் சிறுவனின் முழு மருத்துவ செலவை ஏற்ற துபாய் ஆட்சியாளர்
தண்டுவட தசைச் சிதைவு நோயால் (SMA) பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் மருத்துவச் செலவை துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டார். சிகிச்சைக்கு இன்னும் 2 மாதங்களே அவகாசம் இருந்த நிலையில், 2.4 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜோர்டானைச் சேர்ந்த 16 மாத பெண் குழந்தைக்கு $2.4 மில்லியன் மதிப்பில் SMA சிகிச்சை அளிக்க அவர் உதவியிருந்த நிலையில், தற்போது இந்த ஈராக் சிறுவனுக்கும் உதவியுள்ளார்.
AED 1.5 மில்லியனுக்கு ஏலம் போன பருந்து
அபுதாபி சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் (ADIHEX 2026) நடைபெற்ற ஏலத்தில், “Ultra White Pure Gyr Garmousha” என்ற அரிய வகை இளம் பருந்து AED 1.5 மில்லியனுக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் ‘Mark Moglich’ பண்ணையில் வளர்க்கப்பட்ட இந்த பருந்து 1,000 கிராம் எடையும், தூய்மையான வெள்ளை நிறச் சிறகுகளையும் கொண்டது. நடப்பு ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த பருந்து இதுவாகும்.
இனி ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு விரைவாக செல்லலாம்
ஷார்ஜாவிற்கும் துபாயிற்கும் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய அல் தாவூன் சுரங்கப்பாதை (Al Taawun Tunnel) திட்டம் திறக்கப்படும்போது, இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரம் 85% வரை குறையும்.
இத்திட்டத்தின் முதல் கட்டம் நவம்பர் 2026-ல் (ஷார்ஜா சர்வதேச புத்தகக் காட்சிக்கு முன்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். முழு திட்டமும் பிப்ரவரி 2027-ல் நிறைவடையும்.
500 மீட்டர் நீளமுள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, அல் தாவூன் தெருவை நேரடியாக அல் நஹ்தா பாலம் மற்றும் துபாயுடன் இணைக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தரைமட்ட சுற்றுவட்டச் சாலையை தவிர்த்து தடையின்றி செல்ல முடியும்.
