UAE லாட்டரியில் AED 30 மில்லியன் (சுமார் ரூ.75 கோடி) பரிசை வென்ற அதிர்ஷ்டசாலியின் பாதி பெயர் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் சதாசிவன் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AED 30 மில்லியன் வென்ற இந்தியர்
அபுதாபியில் வசிக்கும் 52 வயதான இந்தியர் சுனில் குமார் சதாசிவன், UAE லாட்டரியின் (The UAE Lottery) ‘லக்கி டே’ (Lucky Day) குலுக்கலில் AED 30 மில்லியன் (சுமார் 75 கோடி ரூபாய்) ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.
கடந்த ஜூலை 1, புதன்கிழமை நடந்த குலுக்கலில், இவர் தேர்ந்தெடுத்த 7 எண்களும் சரியாகப் பொருந்தியதால் இந்த மெகா பரிசைத் தட்டியுள்ளார். இது குறித்து அவர், “முதலில் என்னால் இதை நம்ப முடியவில்லை. மீண்டும் சரிபார்த்த போதுதான் நான் தான் வென்றேன் என்பது உறுதியானது” என்று சுனில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
UAE லாட்டரி இந்த ‘லக்கி டே’ முறையை அறிமுகப்படுத்திய பிறகு, AED 30 மில்லியன் பரிசை வெல்லும் இரண்டாவது நபர் சுனில் ஆவார். இதற்கு முன்பு, கடந்த ஜூன் மாதம் தயாப் கான் என்ற 26 வயது நேபாள நாட்டு பாதுகாப்புப் படை வீரர் தன் நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து டிக்கெட் வாங்கி, இதேபோல் AED 30 மில்லியன் பரிசை வென்றார். அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களில் மற்றொருவர் AED 5 மில்லியன் மதிப்பிலான இரண்டாவது பரிசையும் வென்றுள்ளார்.
லாட்டரி பற்றிய விவரங்கள்:
இந்த ‘லக்கி டே’ குலுக்கல் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு நடக்கும். இதில் முதல் பரிசாக AED 30 மில்லியன், இரண்டாம் பரிசாக AED 5 மில்லியன் மற்றும் தலா AED 50,000 மதிப்பிலான மூன்று ‘லக்கி சான்ஸ்’ பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை AED 50 ஆகும். இது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, ‘The Game LLC’ என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
