ஐக்கிய அரபு அமீரகம் என்பது உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் வணிகர்களையும் அன்போடு வரவேற்கும் நாடாகும். அரபு மக்களின் கலாச்சாரத்தில் விருந்தினர்களை உபசரிப்பதும், மரியாதையுடன் நடத்துவதும் மிக முக்கியமான குணங்களாகக் கருதப்படுகின்றன.
இங்கு வரும் வெளிநாட்டினருக்கு உள்ளூர் மக்கள் எப்போதும் தங்களுடைய அன்பான வரவேற்பை வழங்குவார்கள். இருப்பினும், அமீரகத்தில் இருக்கும் போது அந்நாட்டின் கலாச்சாரம், மத நம்பிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டியது ஒவ்வொரு பார்வையாளரின் சமூகப் பொறுப்பாகும்.
பொதுவிடங்களில்…
அன்பை வெளிப்படுத்துதல்:
பொது இடங்களில் அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கைகளைக் கோர்த்துக்கொண்டு நடப்பது பரவாயில்லை, ஆனால் பொது இடங்களில் முத்தமிடுவதோ அல்லது கட்டியணைப்பதோ கூடாது.
நடத்தை மற்றும் பேச்சு:
சத்தம் போடுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, ஆபாசமான சைகைகள் செய்வது போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
மரியாதை:
அமீரக நாடு, அதன் தலைவர்கள் அல்லது இஸ்லாமிய மதம் குறித்து அவதூறாகப் பேசுவதோ, அவமதிப்பதோ கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு (சிறை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றுதல்) வழிவகுக்கும்.
அமீரகம், அதன் தலைவர்கள், மதம் ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம்.
உணவு உண்ணும் முறை
உபசரிப்பு:
அரபு நாட்டு நண்பர் அல்லது வணிகக் கூட்டாளி (Host) உணவோ அல்லது பானங்களோ வழங்கினால், அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட பிறகே தொழில் சார்ந்த விஷயங்களைப் பேச வேண்டும்.
பகிர்வு:
சாப்பிடத் தொடங்கும் முன், மற்றவர்களுக்கும் அதை வழங்குவது நாகரிகமாகக் கருதப்படுகிறது. அதேபோல், நீங்கள் உணவருந்தும் போது அருகில் இருப்பவர்களுக்கும் உணவை வழங்குவது நல்ல பண்பாக கருதப்படுகிறது.
வலது கை பழக்கம்:
உணவைப் வாங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் எப்போதும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சந்திப்புகளில்…
Majlis போன்ற பாரம்பரிய இடங்களுக்குச் செல்லும்போது காலணிகளை வெளியே கழற்றுவது வழக்கம். எதிர்பாலின இஸ்லாமியர்கள் கை குலுக்குவதற்கு முன், அவர்கள் முதலில் கைகொடுக்கிறார்களா என்பதை கவனிப்பது நல்லது.
ஆடை அணிவதில்…
மால்கள், பொது இடங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது அடக்கமான ஆடைகளை அணிவது சிறந்தது. கடற்கரை, நீச்சல் குளம் அல்லது வாட்டர் பார்க் தவிர மற்ற இடங்களில் நீச்சல் உடை அணிவது அனுமதிக்கப்படாது.
மசூதிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு அபாயா (Abaya) மற்றும் தலை மூடும் துணி பொதுவாக அங்கேயே வழங்கப்படும்.
புகைப்படம் எடுப்பதில் விதிமுறைகள்
அரசு மற்றும் ராணுவ கட்டிடங்கள் போன்ற இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புகைப்படம் எடுப்பதற்கு முன் சுற்றுப்புற விதிமுறைகளை கவனிப்பது எப்போதும் நல்லது.
சிறிய மரியாதையும், உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் அணுகுமுறையும் இருந்தால், அமீரகத்தில் உங்கள் பயணம் மேலும் இனிமையாக அமையும்.
