எதிஹாட் ரயில் இயக்கம் முதல் கோடை திருவிழா வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

சொகுசு ஹோட்டலில் இலவசமாக தங்கும் வசதியை வழங்கும் எமிரேட்ஸ்

துபாய்க்கு எமிரேட்ஸ் விமானத்தில் Return Ticket முன்பதிவு செய்பவர்களுக்கு, துபாயின் பிரபலமான JW Marriott Marquis ஹோட்டலில் இலவச தங்கும் வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கோடை காலத்தை முன்னிட்டு, எமிரேட்ஸ் விமான நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 

அதன்படி, பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பில் துபாய்க்கு Return Ticket முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, துபாயின் 5 நட்சத்திர ஹோட்டலான JW Marriott Marquis-ல் 2 இரவுகள் இலவச தங்குமிடம் வழங்கப்படும்.

அதேபோல், பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்பு பயணிகளுக்கு 1 இரவு இலவச தங்குமிடம் வழங்கப்படும். இந்த சலுகை, ஜூன் 25 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்காக ஜூலை 12-க்குள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அமீரகத்தின் முதல் பயணிகள் ரயில் 

அபுதாபி – புஜைரா இடையேயான எதிஹாட் ரயில் சேவை ஜூன் 30 முதல் தொடங்குகிறது. இதன் மூலம், இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 45 நிமிடங்களாக குறையவுள்ளது. இதற்கான டிக்கெட் கட்டணம் AED 55 முதல் தொடங்குகிறது.

அமீரகத்தின் முதல் பயணிகள் ரயில் சேவையான எதிஹாட் ரயில், அபுதாபி – புஜைரா இடையே வருகிற ஜூன் 30ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் Comfort Class மற்றும் Premium Class என இரு வகையான இருக்கை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. Comfort Class டிக்கெட் கட்டணம் AED 55 ஆகவும், Premium Class டிக்கெட் கட்டணம் AED 120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் கோடை திருவிழா

சலுகை விலையில் ஷாப்பிங் முதல் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை மக்களை உற்சாகமாக வைத்திருக்கும் வருடாந்திர ‘Dubai Summer Surprises’ திருவிழா, வருகிற ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான ‘Dubai Summer Surprises’ திருவிழா, வருகிற ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, துபாயில் உள்ள பல்வேறு மால்களில் நடைபெறும் ‘Great Dubai Summer Sale’ விற்பனையில் பிராண்டட் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

மேலும், இந்த திருவிழாவில் பங்கேற்கும் உணவகங்களில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறப்பு சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி, ‘Beat The Heat DXB’ என்ற இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 28ஆம் தேதி கோகோ-கோலா அரேனாவில் நடைபெற உள்ளது.

பார்க்கிங்குகளில் நள்ளிரவு வரை கட்டணம் வசூல்

ஷார்ஜாவில் மஞ்சள் நிற பலகைகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களில், ஜூலை 1 முதல் நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஷார்ஜாவில் நீல நிற பலகைகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களில் தற்போது நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூலை 1 முதல் மஞ்சள் நிற பலகைகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களிலும் நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஷார்ஜா, கல்பா, கோர்ஃபக்கான் மற்றும் அல் தைத் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மஞ்சள் மற்றும் நீல நிற பலகை கொண்ட கட்டண பார்க்கிங் இடங்களுக்கும் நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

துபாயின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 3  திட்டங்கள் அறிவிப்பு

துபாயின் நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், AI-யால் உருவாக்கப்படும் பூங்கா, துபாய் கிரீக்கில் 8 கி.மீ. நீளத்திற்கு வண்ணமயமான விளக்குகள் அமைப்பது மற்றும் பருந்துகளுக்கான பிரத்யேக சந்தை உள்ளிட்ட 3 புதிய திட்டங்களை துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.

துபாயில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் 3 புதிய பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்துள்ளார்.இந்த திட்டங்களில், உலகின் முதல் AI மூலம் வடிவமைக்கப்படும் பூங்கா, துபாய் கிரீக் பகுதியில் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிநவீன வண்ணமயமான விளக்குகள் அமைக்கும் திட்டம் மற்றும் பருந்துகளுக்கான பிரத்யேக சந்தை ஆகியவை அடங்கும்.

TAGGED: