துபாயில் உள்ள அல் சஃபா 2 பூங்காவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்வதற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை AED 200,000.
துபாய் நகராட்சி உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பூங்காவை வடிவமைக்கும் போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
போட்டியின் நோக்கம்
துபாயில் உள்ள ‘அல் சஃபா 2’ பூங்காவை (Al Safa 2 Park) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய முறையில் மறுவடிவமைப்பு செய்வதுதான் இந்த போட்டியின் நோக்கம்.
சுற்றுசூழல் பாதுகாப்பு, எளிதான அணுகல் வசதி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் சமூகக் கூடுகை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும்.
வடிவமைப்பு முடிவுகள் மனிதர்களால் எடுக்கப்பட்டாலும், அதற்கு முந்தைய தரவு பகுப்பாய்வு (Data Analysis), காலநிலைக்கேற்ற வடிவமைப்பு, மற்றும் காட்சிப்படுத்துதல் (Visualisation) போன்ற அனைத்து நிலைகளிலும் AI கருவிகள் எவ்வாறு உதவின என்பதை போட்டியாளர்கள் நிரூபிக்க வேண்டும்
யார் யாரெல்லாம் பங்கேற்கலாம்?
- நகர திட்டமிடுபவர்கள் (Urban Planners)
- கட்டிடக் கலைஞர்கள் (Architects)
- வடிவமைப்பாளர்கள் (Landscape Architects)
- கல்லூரி மாணவர்கள்
- ஆராய்ச்சி மாணவர்கள்
- ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
- AI தொழில்நுட்ப வல்லுநர்கள்.
முக்கியத் தேர்வு அளவுகோல்கள் (Criteria)
சமர்ப்பிக்கப்படும் வடிவமைப்புகள் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
- AI தொழில்நுட்பத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்?
- வடிவமைப்பு நடைமுறைக்கு சாத்தியமானதா மற்றும் மனிதர்களின் தேவைகளை மையமாகக் கொண்டுள்ளதா?
- அனைத்து தரப்பு மக்களும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) பயன்படுத்தும் வகையில் உள்ளடக்கியதாக உள்ளதா?
- துபாயின் அடையாளம் மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறதா?
பரிசுத் தொகை
இந்தப் போட்டிக்கு மொத்தம் AED 2,00,000 background பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசு: AED 1,00,000
இரண்டாம் பரிசு: AED 65,000
மூன்றாம் பரிசு: AED 35,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://aipark.dm.gov.ae/ai-competition என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2026 ஆகும்.
நடுவர் குழு மற்றும் மக்கள் பங்கேற்பு:
துபாய் அரசின் உயர்மட்டத் தலைவர்கள், சர்வதேச AI மற்றும் கட்டிடக்கலை வல்லுநர்கள் அடங்கிய குழு முதற்கட்டமாக சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும். அதன் பிறகு, துபாய் மக்களின் வாக்குகள் (Community Voting) மூலமே இறுதி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் மூலம் மக்களின் தேவைக்கேற்ப பூங்கா அமைவதை துபாய் அரசு உறுதி செய்கிறது.
